10 ஆண்டுகளாக கட்டுகிறார்கள்.. மதுரை எய்ம்ஸ் என்ன விண்வெளி ஆராய்ச்சி நிலையமா.. ஸ்டாலின் ஆவேசம்!
சேலம்: 10 ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிலை என்ன ஆனது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை வந்த அமித் ஷா தனது ஆத்திரத்தை கொட்டி தீர்த்துள்ளதாக கூறிய ஸ்டாலின், தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு செய்த ஒரேயொரு சிறப்பு திட்டத்தை கூறட்டும் என்றும் சவால் விடுத்துள்ளார்.
சேலத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணம் வந்துள்ள முதல்வர் ஸ்டாலின், இன்று காலை மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், சேலத்தில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் சாலைகள் சீரமைக்கப்படும்.

சேலத்திற்கு புதிய திட்டங்கள்
சேலம் செவ்வாப்பேட்டை தினசரி சந்தை ரூ.9 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். சங்ககிரி நகராட்சியில் புதிய வணிக வளாகம் கட்டப்படும். மேட்டூர் நரசிங்கபுரத்தில் புதிய நகராட்சி கட்டடங்கள் கட்டப்படும். ஆத்தூரில் ரூ.5 கோடியில் புதிய குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும். தாரமங்கலம், எடப்பாடி, ஆத்தூர் பகுதிகளில் புதிய குடிநீர்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
அமித் ஷாவுக்கு பதிலடி
தலைவாசல் இழுப்பநத்தம் வேளாண் விற்பனை மையம் ரூ.10 கோடியில் தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்தார். தொடர்ந்து மதுரையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன் வைத்த விமர்சனங்களுக்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், மதுரை வந்த அமித் ஷா, 10 ஆண்டுகளுக்கு முன் பாஜக சார்பாக அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிலை எப்படி உள்ளது என்பதை பார்த்தாரா?
விண்வெளி ஆராய்ச்சி நிலையமா
10 ஆண்டுகளாக கட்டுவதற்கு அது எய்ம்ஸ் மருத்துவமனை தானா அல்லது விண்வெளி ஆராய்ச்சி நிலையமா? தேவையான நிதியை ஒழுங்காக ஒதுக்கி இருந்தால், 2 ஆண்டுகளில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி முடித்து இருக்கலாமே? அதே மதுரையில் நாங்கள் ஆட்சி அமைத்த பின் ஏராளமான பணிகளை முடித்திருக்கிறோம்.
சிறப்பு திட்டம் இருக்கா?
கலைஞர் நூற்றாண்டு நூலகம், ஜல்லிக்கட்டு அரங்கம், கீழடி அருங்காட்சியகம் என்று எண்ணற்ற பணிகளை முடித்திருக்கிறோம். 3வது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள், தமிழ்நாட்டுக்காக செய்த ஒரு சிறப்பு திட்டத்தை கூற முடியுமா? 11 ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு செய்த திட்டங்கள் என்ன?: அந்த பட்டியலை இதுவரை தரவில்லை. ஏனென்றால் சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்.
கீழடி விவகாரம்
கேட்டால் கூடுதல் நிதியை ஒதுக்கி இருக்கிறேன் என்கிறார்கள்.. அன்றைய பொருளாதாரம், விலைவாசி என்ன? தங்கம் விலை அன்று ரூ.5 ஆயிரம்.. இன்று ரூ.71 ஆயிரம்.. அதுமட்டுமல்ல, தமிழர்களின் தொன்மையை அழிக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. கீழடி அறிவியல் ஆய்வில் எழுதப்பட்ட அறிக்கையை போதவில்லை என்று கூறுகிறார் மத்திய அமைச்சர் ஷெகாவத்.
எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி
தமிழ்நாட்டின் உரிமைகள் பறிபோன போது பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள எடப்பாடி பழனிசாமி வாய் திறந்து கேள்வி கேட்டாரா? டெல்லிக்கு தலையாட்டி பொம்மையாக அமர்ந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. நாம் நிதியை மடைமாற்றுவதாக அமித் ஷா எந்த அடிப்படையில் குற்றம்சாட்டுகிறார்? மத்திய அரசின் திட்டங்களுக்கு மாநில அரசு 50 சதவிகித நிதியை கொடுத்து வருகிறது. படையப்பா படத்தை போல் மாப்பிள்ளை அவருதான்.. சட்டம் என்னுடையது என்பதை போல் மத்திய அரசு செயல்படுகிறது என்று விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications