சொன்னதை செய்தது பாஜகதான்.. திமுக நம்பவைத்து ஏமாற்றிவிட்டது.. சேலத்தில் பாய்ந்த எல்.முருகன்!
சேலம்: மகளிர் உரிமைத் தொகை, கல்விக் கடன் ரத்து உள்ளிட்ட ஏராளமான தவறான தேர்தல் வாக்குறுதிகளை அளித்து திமுக மக்களை ஏமாற்றியுள்ளது என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் பாஜக மாநில துணைத்தலைவர் கேபி. இராமலிங்கத்தின் இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணையமைச்சர் எல். முருகன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன், இந்தியாவில் கடந்த 8 ஆண்டுகளில் எண்ணற்ற சாதனைகளை பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது. 2014ம் ஆண்டுக்கு முன் கழிப்பிட தேவை குறித்து பேசுவது தயக்கமாகவே இருந்தது. ஆனால் பாஜக ஆட்சியில் அனைத்து பள்ளிகளுக்கும், ஏழை மக்களின் வீடுகளுக்கும் கழிப்பிடம் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.

பாஜக வாக்குறுதி
இது மட்டுமில்லாமல் பாஜக சார்பாக அயோத்தியில் ராமர்கோவில் கட்டுவோம் என்று கூறினோம். அது தற்போது நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் மக்களுக்கு அர்ப்பணிப்போம். முத்தலாக் பிரச்னைக்கு முடிவு கட்டியுள்ளோம். பாஜகவின் அடிப்படை கொள்கைகளை நிறைவேற்றி உள்ளோம் என்றும் கூறினார்

கடமை தவறிய திமுக
ஆனால் தமிழ்நாட்டில் நகைகடன் தள்ளுபடி என்று சொல்லி, அதற்கு பல்வேறு விதிமுறைகளை கூறி மக்களை ஏமாற்றினர். நகைக்கடன் விதிமுறைகளால் மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, கல்விக் கடன் தள்ளுபடி, மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை என திமுக மக்களை ஏமாற்றுவதற்காக தவறான தேர்தல் அறிக்கையை கொடுத்துள்ளது. தேர்தல் அறிக்கையில் கூறியதை செய்ய தவறிவிட்டார்கள். அதை நிறைவேற்றுவதற்கு திமுக முன்வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மக்கள் வேதனை
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் பாலியல் குற்றங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் அதிகரித்துள்ளது. எதற்கு திமுகவிற்கு வாக்களித்தோம் என்று வேதனையில் மக்கள் உள்ளனர் என்று தெரிவித்தார்.

ஆளுநர் விவகாரம்
மேலும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தரப்பில் வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, வெற்று விளம்பரத்திற்காக ஆளுநர் குறித்து பேசி வருகின்றனர் என்று காட்டமாக பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications