சேலத்தில் 150 ஆண்டாக மாடி வீடுகளே இல்லாத வினோத கிராமம்! திகிலூட்டும் வவ்வால்கள்! மரண பயத்தில் மக்கள்
சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டத்தைச் சேர்ந்த கருத்தராஜபாளையம் மாடி வீடுகளே இல்லாத கிராமம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இந்த வினோதத்தை 150 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதி மக்கள் கடைப்பிடித்து வருகிறார்கள்.
நாகரீகம் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் நவீன யுகம் இது. இங்கு நகரங்களுக்கு இணையாக கிராமங்களும் வளர்ச்சியை கண்டு வருகிறது. வீட்டையே தனியாக பெயர்த்து வேறு இடத்திற்கு கொண்டு செல்லும் லிஃப்டிங் டெக்னிக் எல்லாம் வந்துவிட்டது. ஆனாலும் ஒரு கிராமத்தில் மாடி வீடுகளே இல்லையாம்.

அப்படி மாடி வீடு கட்டினால் உயிருக்கு ஆபத்து என்பதால் இந்த வழக்கத்தை அப்பகுதி மக்கள் காலம் காலமாக கடைபிடித்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் 250 குடும்பங்கள் உள்ளன. மொத்த மக்கள்தொகை 1600 இருக்கும் என்கிறார்கள்.
இங்குள்ள மக்கள் பெரும்பாலும் விவசாயத்தையே நம்பி உள்ளனர். அத்துடன் தென்னங்கீற்றை கிழித்து அந்த ஓலையில் உள்ள குச்சியை எடுத்து துடைப்பம் செய்தும் விற்பனை செய்து வருகிறார்கள். இங்குள்ள வீடுகள் எல்லாமே கான்கிரீட் வீடுகள், ஓட்டு வீடுகள், கூரை வீடுகள், சிமென்ட் ஷீட் போட்ட வீடுகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இங்கு ஒரு இடத்தில் கூட மாடி வீடே இல்லை. எல்லாமே கிரவுன்ட் ஃப்ளோருடன் இருக்கிறது. முதல் தளம் என்ற ஒன்றே இல்லை. அப்படி மாடி வீடு கட்டினால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் என்கிறார்கள். இதற்கு காரணம் அங்குள்ள பெரியசாமிதான். எல்லா உயிர்களையும் காக்கும் சுவாமியே தரைதளத்தில் இருக்கும் போது அவரது கோயிலை விட பெரிய மாடி வீடு கட்டி வசிக்கக் கூடாது என்பதுதான் இவர்களது நம்பிக்கை.
அதுவும் சாமியை அன்னார்ந்து பார்க்க வேண்டுமே தவிர மேலிருந்து பார்க்கக் கூடாது என்றும் இந்த பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள். இந்த கோயில் கருத்தராஜபாளையத்தில் ஊருக்கு வெளியே ஓடை அருகில் உள்ளது. கோயிலில் வீற்றிருக்கும் பெரியசாமியோ கண்கள் பெரிதாக முகம் செவ செவ என இருக்கும் வகையில் பார்க்கும் பார்வையு்ம ஆக்ரோஷமாகவே இருக்கிறார்.
இவர் குதிரையில் இரவு நேரங்களில் வேட்டைக்கு செல்கிறார் என மக்கள் நம்புகிறார்கள். இந்த கடவுளின் மற்றொரு பெயர் கருப்பையா ஆகும். இவரை சக்தி வாய்ந்த தெய்வம் என்கிறார்கள். கிராமத்தில் யாராவது தவறு செய்தால், அதை சாமி நாயுடன் வந்து கனவில் சொல்வார். அவர்கள் பெரியசாமி கோயிலுக்கு சென்று வேல் ஒன்றை தலைகீழாக நட்டு வைத்தால் அவர்களை சுவாமி மன்னித்துவிடுவார்.
வீடுகளில் யாரும் இரவு நேரங்களில் குழந்தைகளை தொட்டிலில் படுக்க வைக்க மாட்டார்கள். அது போல் கோயில் எல்லைக்குள் நுழைந்துவிட்டால் செருப்பை அணிய மாட்டார்கள். இந்த கோயில்களில் பழந்தின்னி வவ்வால்கள் வேறு மிரட்டுகின்றன. இவரை கொல்லிமலையில் பழங்களை உண்டுவிட்டு ஊருக்கு திரும்பி வந்துவிடுகின்றன.
இந்த ஊர் கட்டுப்பாட்டை மீறி யாரும் மாடி வீட்டை கட்டியதே இல்லை. அப்படியே யாராவது கட்டினால் பெரியசாமி அவர்களுடைய குடும்பத்தில் பல சோதனைகளை காட்டிவிடுவார். அரசு தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கு கூட இந்த பகுதி மக்கள் மாடி வீடு வேண்டாம் என்கிறார்கள். ஆனால் விதிபடி மாடி வீடுதான் அரசு தொகுப்பில் கட்ட வேண்டும் என்பதால் அதிகாரிகளும் செய்வதறியாமல் இருக்கிறார்கள்.

கோயிலில் உள்ள பெரியசாமி, கி.பி. 15ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. இந்த சாமியின் வேண்டுகோள்படி கொல்லிமலையில் வாழும் பழங்குடி இனத்து மக்கள் இந்த சாமியை அந்த கிராமத்தில் தற்போது இருக்கும் இடத்தில் வைத்தனராம். அது முதல் இந்த சாமியை மக்கள் காலம் காலமாக வணங்கி திருவிழாவையும் நடத்தி வருகிறார்கள்.
இந்த ஊருக்குள் கழிவுநீர் கால்வாய் அமைக்கவும் பொதுமக்கள் விரும்புவதில்லை. ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் போய் பேச்சுவார்த்தை நடத்திய போது கூட அந்த கழிவு நீர் சுவாமி இருக்கும் பகுதிக்கு சென்றுவிடும் என்பதால் மக்கள் யாருமே அந்த திட்டத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. அது போல் இந்த ஊரை சேர்ந்தவர்கள் வேறு ஊருக்கு பஞ்சம் பிழைக்கச் சென்றாலும் அவர்களும் மாடி வீடு கட்டக் கூடாது . இந்த ஊர் கட்டுப்பாட்டை இன்றும் பலர் பின்பற்றி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications