சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ்.. இந்த 2 பிரபலங்களை தந்த ஸ்பாட் இதுதான்.. பலே டிஆர்எஸ்.. யார் இவர்?
சேலம்: சேலத்தில் உள்ள மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவு வாயில் பகுதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை வைக்கப்படுவதாக செய்திகள் வெளியான நிலையில் அந்த தியேட்டர்ஸ் எப்படி உருவானது என்பதை பார்ப்போம்.
தமிழகத்தில் சேலத்தில் திருச்செங்கோடு ராமலிங்கம் சுந்தரம் (டிஆர்எஸ்) 1935ஆம் ஆண்டு தொடங்கிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம்தான் மாடர்ன் தியேட்டர்ஸ். தென் இந்தியாவில் முதல்முறையாக உருவாக்கப்பட்ட பெரிய திரைப்படக் கூடம் இது. இந்த மாடர்ன் தியேட்டர்ஸ் ஆண்டுக்கு 3 படங்களையாவது உருவாக்கி கொண்டிருந்தது. முதல் முறையாக கலர் படத்தை தயாரித்த பெருமையும் இந்த மாடர்ன் தியேட்டர்ஸுக்கு உண்டு.

சினிமா தயாரிப்பு என்றாலே கொல்கத்தாதான் என்ற நிலை இருந்தது. அங்கு போய்தான் எடிட்டிங் செய்வது, சீன்களை சேர்ப்பது, குறைப்பது, பாடல் ரெக்கார்டிங் உள்ளிட்டவை இருந்தது. அதை தனது சினிமா தயாரிப்பு மீதான ஆர்வத்தால் மாற்றி காட்டினார் டி.ஆர்.எஸ். சினிமா தயாரிப்பு தொடர்பாக எல்லாவற்றுக்கும் கொல்கத்தா போக வேண்டியதாக இருந்த நிலையில் ஏன் சேலத்திலேயே ஒரு தியேட்டர்ஸை தொடங்கக் கூடாது என நினைத்து இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது.
மாடர்ன் தியேட்டர்ஸில் ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி என்ற படம் எடுக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வசன ஆற்றலை பார்த்து வியந்த டிஆர்எஸ் தனது மாடர்ன் தியேட்டர்ஸில் வசனகர்த்தாவாக பணிபுரிய கருணாநிதிக்கு டிஆர்எஸ் அழைப்பு விடுத்தார். அதன்படி மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்து கருணாநிதி கதை வசனம் எழுதிய படம் தான் மந்திரி குமாரி. இந்த படம் வெற்றி படமாக அமைந்தது.
கருணாநிதி, எம்ஜிஆர் என இருவரது வாழ்விலும் திருப்புமுனையை இந்த படம்தான் ஏற்படுத்தியது. தமிழில் முழுநீள வண்ண படத்தை தயாரிக்க முடிவு செய்த நிலையில் இந்த மாடர்ன் தியேட்டர்ஸில் தயாரிக்கப்பட்டதுதான் அலிபாபாவும் 40 திருடர்களும் . மாடர்ன் தியேட்டர்ஸின் 99ஆவது படமாக கொஞ்சும் குமரி தயாரிக்கப்பட்டிருந்தது. அதில் கதாநாயகியாக மனோரமா நடித்திருந்தார். இந்த நிலையில் 1963 இல் டிஆர்எஸ் மாரடைப்பால் உயிரிழந்தார். அப்போது சூட்டிங்கில் இருந்த மனோரமா, மேக்கப்பை கூட கலைக்காமல் டிஆர்எஸ்ஸுக்கு அஞ்சலி செலுத்த சென்றார்.
இந்த நிறுவனத்தில் இதுவரை 136 படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அதில் தமிழ் மட்டும் 102 படங்களாகும். தெலுங்கில் 13 படங்களும் கன்னடத்தில் 4 படங்களும் மலையாளத்தில் 8 படங்களளும் சிங்களத்தில் 7 படங்களும் இந்தி, ஆங்கிலத்தில் தலா ஒரு படமும் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்டூடியோவில் முதல் இரட்டை வேட படமான உத்தமபுத்திரன் தயாரிக்கப்பட்டது. யானை, சிங்கங்களை வைத்து சாண்டோ சின்னப்பா தேவரும் பல படங்களை எடுத்துள்ளார்.
சேலம் ஏற்காடு மலை அடிவாரத்தில் 10 ஏக்கர் நிலத்தை டி.,ஆர்.சுந்தரம் வாங்கியிருந்தார். இந்த ஸ்டூடியோவில் முழு படத்தையும் தயாரிக்கக் கூடிய அனைத்து வசதிகளையும் வைத்திருந்தார். படப்பிடிப்பு தளம், பாடல் பதிவு, திரைப்படத்தை போட்டு பார்க்க அரங்கம் என அனைத்து வசதிகளும் இருந்தன.
டிஆர் சுந்தரம் வெளிநாட்டில் படித்தவர், தனது ஜவுளி தொழிலில் மகனும் கால்பதிப்பார் என டிஆர்எஸ்ஸின் தந்தை நினைத்திருந்த போது சினிமா மீது இருந்த ஆர்வம் காரணமாக தயாரிப்பு பக்கம் சென்றுவிட்டார். முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, எம்ஜிஆருக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய இடமாக இது இருந்தது.
இந்த இடத்தை ஒரு கட்டுமான நிறுவனம் விலைக்கு வாங்கி வீடு கட்டி விற்பனை செய்துவருகிறது. ஆனால் அந்த பாரம்பரிய நுழைவு வாயில் மட்டும் தற்போது இருக்கிறது. 10 ஏக்கர் நிலத்தில் தற்போது வெறும் 1345 சதுர அடி மட்டுமே உள்ளது. இந்த சேலம் மாடர்ன் தியேட்டருக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கு நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டார்.












Click it and Unblock the Notifications