கொங்கு மண்டலமே கொதிச்சு போய் கிடக்கு.. சேலத்தில் தம்பதி கொடூர கொ**.. தொடர் சம்பவங்களால் அச்சம்!
சேலம்: கொங்கு மண்டலத்தில் அடுத்தடுத்து தனியாக வசிக்கும் தம்பதியினர் கொடூரமாக கொலை செய்யப்படும் சம்பவங்களால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். திருப்பூர் மற்றும் ஈரோட்டில் தனியாக வசித்த தம்பதியினர் கொலை செய்யப்பட்ட நிலையில், தற்போது சேலத்திலும் தம்பதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பூரில் தனியாக வசித்த தம்பதியினர் வெட்டி படுகொலை செய்யப்பட்டு நகை பணம் ஆகியவை கொள்ளை அடிக்க பட்டன. இந்த சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் ஈரோட்டிலும் கணவனும் மனைவியும் கொலை செய்யப்பட்டு நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது,
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் தனியாக வசிக்கும் தம்பதிகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என போலீசார் கூறியிருந்தனர். இந்நிலையில் சேலத்தில் தனியாக வசித்த தம்பதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் சூரமங்கலம் அருகே உள்ளது ஜாகீர் அம்மாபாளையம் . இங்குள்ள பாரதி நகரை சேர்ந்தவர் பாஸ்கரன் ( வயது 65 ) இவர் மளிகை கடை வைத்துள்ளார். இவரது மனைவி வித்யா (வயது 60). இவர்களுக்கு வாசுதேவன் மற்றும் தினேஷ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இருவரும் தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று பிற்பகலில் பாஸ்கரனும் அவரது மனைவி
வித்யாவும் வீட்டில் இருந்தனர். இன்று பகல் 3:30 மணி அளவில் பாஸ்கரன் தனது மளிகை கடையில் இருந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது பகல் 4 மணி அளவில் வித்யாவும்,பாஸ்கரனும் பலத்த ஆயுதங்களால் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் வீட்டுக்குள் கிடந்தனர். இதை அறிந்த பொதுமக்கள் அங்கு ஓடி வந்து இருவரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால் வித்யா சிறிது நேரத்தில் துடி துடித்து இறந்துவிட்டார். படுகாயம் அடைந்த பாஸ்கரன் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பாஸ்கரன் இறந்துவிட்டார். பின்னர் அவரது உடல் சேலம அரசு மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டது.
இந்த கொலையைஅறிந்த சேலம் மாநகர காவல் ஆணையாளர் பிரவீன் குமார் அபினவு உடனே சம்பவ இடம் வந்து நேரில் விசாரணை செய்தார். கைரேகை நிபுணர் மற்றும் போலீஸ் மோப்ப நாய் லில்லி அழைத்து வரப்பட்டு மோப்பம் பிடிக்க விடப்பட்டது. போலீஸ் மோப்ப நாய் சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. இதன் பின்னர் வீட்டில் சடலமாகக் கடந்த வித்யாவின் சடலம் உடற்கூறாய்வு செய்ய சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கொலை நடந்த பகுதி எப்போதும் ஆள் நடமாட்டம் உள்ள பகுதி. இதனால் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர் .
இதில் வாலிபர் ஒருவர் சந்தேகத்துக்கிடமாக நடந்து செல்வது தெரிய வந்துள்ளது. இவர் யார் என தற்போது விசாரணை நடக்கிறது. இந்த கொலையில் துப்பு துலங்க சேலம் மாநகர காவல் ஆணையாளர் பிரவீன் குமார் அபினவு , சேலம மாநகர போலீஸ் துணை கமிஷனர் சிவராமன், உதவி கமிஷனர் அஸ்வினி தலைமையில் தனி படை அமைத்துள்ளார். இவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த கொலை சம்பவத்தில் வடநாட்டு வாலிபர்கள் யாரும் ஈடுபட்டு இருக்கலாமா என்ற கோணத்திலும் தற்போது விசாரணை யடுத்து சூரமங்கலம் மற்றும் ஜாகிர்அம்மாபாளையம் பகுதிகளில் வசிக்கும் வடநாட்டு வாலிபர்கள் சிலரை போலீசார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த கொலையை அறிந்த ஜாகிர் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் அங்கு வந்து ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் சாராயம் மற்றும் கஞ்சா விற்கப்படுகிறது .இதனால் கொலை நடந்ததா என விசாரிக்க வேண்டும் என தெரிவித்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், போலீசார் அங்கு விரைந்து வந்து பொதுமக்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். கொலையான பாஸ்கரனும் அவரது குடும்பத்தினரும் நாளை பழனிக்கு சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நாளை அதிகாலை 4 மணியளவில் பழனிக்கு செல்ல இருந்தோம். அதற்குள் கொலை நடந்து விட்டது என பாஸ்கரனின் மகன் தினேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஈரோடு ,திருப்பூரில் நடந்த கொலை சம்பவம் போல சேலத்தில் இரட்டை கொலை நடந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. நாளைக்குள் கொலையாளியை கைது செய்ய வேண்டுமென சேலம் மாநகர காவல் ஆணையாளர் பிரவீன் குமார் அபினவ தனி படைக் உத்தரவிட்டார். இதனையடுத்து தனிப்படை போலீசார் தனித்தனியாக பிரிந்து சென்று தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.. இரட்டை கொலை சம்பவம் நகைக்காக நடந்ததா ? அல்லது வேறு ஏதும் காரணம் உண்டா என்றும் தற்போது விசாரணை நடக்கிறது.












Click it and Unblock the Notifications