பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ்.. தவெக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? எடப்பாடி ஆவேசம்!
சேலம்: ஒரு பெண் மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ ஆபாச மெசேஜ் அனுப்புகிறார் என்றால், ஏன் அவர் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். பெரும்பாலான கட்சித் தலைவர்கள் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறிய எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் கொலை நடக்காத நாளே கிடையாது என்றும் கூறியுள்ளார்.
அண்மையில் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ், பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மாவட்ட ஆட்சியர் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படாத சூழலில், தவெக தலைமைக்கு இந்த விவகாரம் தலைவலியாக மாறியுள்ளது. மாவட்ட ஆட்சியரின் கணவரும், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில், 6 மாத தவெக ஆட்சியில் முதல்வர் விஜய் எந்தவொரு பெரிய திட்டத்தையும் அறிவிக்கவில்லை. ரீல்ஸை நம்பியே ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. மக்களுக்கு தேவையான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது. இந்த அரசு கும்பகர்ணனை போல் தூங்கி கொண்டிருக்கிறது.
இதனால் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே கொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதனை தடுக்க திராணியற்ற அரசாக இந்த அரசு உள்ளது. மாநிலம் முழுவதும் கிராம முதல் நகரம் வரை போதைப்பொருள் விற்பனை நடந்து கொண்டிருக்கிறது. கஞ்சா விற்பனையை இந்த அரசால் தடுக்க முடியவில்லை. எடப்பாடி நகரத்தில் ஒரு நம்பர் லாட்டரி சீட் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா 6 மாதத்தில் சிறப்பான ஆட்சியை கொடுப்போம் என்றார். ஆனால் 6 மாதத்தில் கொலை நடக்காத நாட்களே இல்லை என்ற நிலை உள்ளது. தீபாவளி பண்டிகையன்று 11 கொலைகள் நடந்திருக்கின்றன. அதற்கு அமைச்சர் ராஜ்மோகன், இந்த தீபாவளியன்று தான் கொலை நடந்ததா? திமுக ஆட்சியில் கொலை நடக்கவில்லையா என்று கேட்கிறார். கொலைகளை தடுக்க வேண்டிய ஆட்சியாளர்களின் கடமை.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு கொஞ்சம் கூட காவல்துறையை கண்டு பயமே கிடையாது. கிரீன்வேஸ் சாலையிலேயே கொலை நடக்கிறது. நீதிபதிகள் இருக்கும் பகுதியிலேயே பாதுகாப்பு இல்லை என்றால், மற்ற பகுதிகளில் எப்படி இருக்கும்.. இதனை முதல்வர் கண்டும் காணாமலும் இருக்கிறார்.
மக்களின் கோரிக்கைகளை கேட்பது எம்எல்ஏ-க்களின் கடமை. அப்படி மனு கொடுக்க வந்தவர் மீது தாக்குதல் நடத்துவது சரியா? அதேபோல் பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்புகிறார் ஒரு எம்எல்ஏ.. அவர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? அத்தனை கட்சித் தலைவர்களும் இந்த விவகாரத்தில் குரல் கொடுத்துவிட்டனர். இந்த அரசு தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.




Click it and Unblock the Notifications
