மேகதாது விவகாரம்.. மெளன புரட்சி செய்வதில் விஜய் வல்லவராக உள்ளார்.. எடப்பாடி பழனிசாமி கிண்டல்
சேலம்: கர்நாடகாவுடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருக்கிறார். காவிரியில் நீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவுகளை கர்நாடகா ஒருபோதும் மதிப்பதில்லை என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் கடுமையான வறட்சி நிலவுவதால், பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
மேகதாது மற்றும் காவிரி தண்ணீர் விவகாரம் தொடர்பாக முதல்வர் விஜய் கர்நாடகா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆகஸ்ட் 3ஆம் தேதி பயணிக்க இருந்தார். ஆனால் கர்நாடகாவில் நிலவி வரும் எதிர்ப்பு காரணமாக, முதல்வர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் என்று அம்மாநில முதல்வர் டிகே சிவக்குமார் கேட்டு கொண்டுள்ளார். இதனால் விஜய்யின் கர்நாடகா பயணம் முடிவுக்கு வந்துவிட்டதாகவே பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், காவிரியின் குறுக்கே கர்நாடகா அரசு மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. 2018ஆம் ஆண்டே உச்சநீதிமன்றம் காவிரி நதிநீர் குறித்து தெளிவான தீர்ப்பை அளித்துவிட்டது. அந்த தீர்ப்பின்படி கர்நாடகா ஒவ்வொரு மாதமும் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க வேண்டும்.
ஆனால் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகும் கர்நாடகா ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட காலத்தில் காவிரியில் தண்ணீர் திறப்பதில்லை. அவர்களிடம் வாதாடி போராடி தான் தண்ணீரை பெறும் நிலை இருக்கிறது. கர்நாடகா முதல்வராக புதிதாக பொறுப்பேற்றுள்ள டிகே சிவக்குமார், மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என்று பேசி வருகிறார். இது கண்டிக்கத்தக்கது.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டினால், டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகும். 20 மாவட்டங்களுக்கு காவிரி தான் குடிநீர் ஆதாரமாக உள்ளது. டிகே சிவக்குமார் இரு மாநிலங்களுக்கும் இடையிலான நல்லுறவை சிதைக்கும் வகையில் பேசி வருகிறார். கர்நாடகாவுடன் முதல்வர் விஜய் எந்தவித பேச்சுவார்த்தையிலும் ஈடுபடக் கூடாது.. அதனை விஜய் தவிர்க்க வேண்டும்.
காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவை கர்நாடகா அரசு மதிப்பதில்லை. மேகதாது விவகாரம் ஒரு உணர்வுப்பூர்வமான பிரச்சனை.. இதுதொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.. விவசாயிகளின் கருத்துக்களை பெற வேண்டும்.. இதுவே அனைத்து அரசியல் கட்சிகளின் நிலைப்பாடாக இருக்கிறது. ஆனாலும் முதல்வர் விஜய் வாய் திறக்கமல் அமைதியாக உள்ளார். இது விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சனை.
எதிர்க்கட்சிகளின் குரலை முதல்வர் விஜய் பொருட்படுத்துவதில்லை. மெளன புரட்சி செய்வதில் விஜய் வல்லவராக இருக்கிறார். கர்நாடகா முதல்வருக்கு இருக்கும் அக்கறை தமிழக முதல்வர் விஜய்க்கு இல்லை. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. அதனால் தவெக அரசு தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை போல் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்து அறிவிப்பை வெளியிட வேண்டும். என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
