மேட்டூர் அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு.. காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை!
சேலம்: மேட்டூர் அணையில் நீர்மட்டம் 120 அடியை எட்டிய நிலையில், வினாடிக்கு 45,400 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. 75 ஆயிரம் கனஅடி வரை நீர் திறக்க வாய்ப்பு உள்ளது. ஒகேனக்கலில் நீர்வரத்து 50,000 கன அடியாக உயர்ந்துள்ளது. இதையொட்டி, காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் கபினி அணையின் மொத்த நீர்மட்டம், 65 அடி. அதில் நீர் இருப்பு 19.5 டி.எம்.சியாக உள்ளது. கே.ஆர்.எஸ் அணையின் மொத்த நீர்மட்டம், 124.8 அடி. நீர் இருப்பு, 49.5 டி.எம்.சியாக உள்ளது. கர்நாடகாவின் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பருவ மழைக்கேற்ப, நேற்று கே.ஆர்.எஸ் அணை நீர்வரத்து, வினாடிக்கு, 25,506 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து, 23,878 கனஅடி உபரிநீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது. கபினி நீர்வரத்து வினாடிக்கு, 21,798 கனஅடியாக இருந்த நிலையில், 21,000 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

குறிப்பாக கே.ஆர்.எஸ் அணை நீர்வரத்து அதிகரித்ததால், அணையில் இருந்து வினாடிக்கு, 30,000 முதல், 50,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், கர்நாடகா அணை அதிகாரிகள் சார்பில், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. நடப்பு ஆண்டில், 4வது முறையாக நேற்று முன்தினம் மேட்டூர் அணை நிரம்பியது. அணைக்கு வினாடிக்கு, 25,400 கனஅடி நீர் வந்த நிலையில், நேற்று காலை, 35,400 கனஅடியாக அதிகரித்தது. இரவு, 9 மணி முதல், 45,400 கன அடியாக அதிகரித்தது.
இதில், 18,000 கனஅடி நீர், மின் உற்பத்தி நிலையங்கள் வழியாகவும், 400 கனஅடி நீர் கால்வாய் வழியாகவும் பாசனத்துக்கு வெளியேற்றப்பட்டது. 27,000 கனஅடி உபரிநீர், 16 கண் மதகு வழியே வெளியேற்றப்பட்டது. அணைக்கு வரும் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரிப்பதால், உபரிநீர் திறப்பு படிப்படியாக 75 ஆயிரம் கன அடி வரை அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோரங்களில் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒகேனக்கலில் நீர்வரத்து 50,000 கன அடியாக உயர்ந்துள்ளது. நீர் வரத்து நேற்று 32,000 கன அடியாக இருந்த நிலையில் இன்று காலை முதல் 50,000 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக ஒகேனக்கல் அருவியில் சுற்றுல பயணிகள், பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications