உங்கள் பெயரில் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டை வேறு ஒருவருக்கு மாற்றுவது இப்ப ரொம்ப ஈஸி
சேலம்: உங்கள் பெயரில் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டை மற்றொருவர் பெயருக்கு எப்படி மாற்றுவது? அதற்கான வழிமுறை என்ன? என்று சேலம் ரயில்வே அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அதனை இப்போது பார்ப்போம்.
பொதுவாக ரயிலில் செல்ல முன்பதிவு செய்யும் நபர்கள், அந்த சமயத்தில் போக முடியவில்லை என்றால் பலர் டிக்கெட்டை ரத்து செய்து விடுகிறார்கள். ஆனால் ரயில் டிக்கெட்டை ரத்து செய்யாமல் உங்கள் பெயரில் உள்ள டிக்கெட்டை வேறு நபருக்கு மாற்றி தரும் வசதி ரயில்வேயில் உள்ளது. நீங்கள் ஆன்லைனில் புக்கிங் செய்திருந்தாலும், நேரில் புக்கிங் செய்திருந்தாலும் டிக்கெட்டை எளிதாக மாற்ற முடியும்.

சேலம் ரயில்வே கோட்ட ரயில்வே அதிகாரிகள் இந்த திட்டம் குறித்து கூறும் போது, ஒருவர்ஆன்லைனிலேயே அல்லது நேரிலேயோ டிக்கெட் முன்பதிவு செய்த பின்னர், கடைசி நேரத்தில் திடீரென சந்தர்ப்ப சூழ்நிலையால் தனது பயணத்தை ரத்து செய்ய வேண்டிது வரலாம். அப்படி பயணத்தை ரத்து செய்ய வேண்டிய நிலை வந்தால், 24 மணி நேரத்துக்கு முன்னதாக ரயில் நிலைய முதன்மை டிக்கெட் கண்காணிப்பாளரிடம் கடிதம் அளித்து, தங்கள் தந்தை, தாய், சகோதரர், சகோதரி, மகன், மகள், கணவன் அல்லது மனைவிக்கு பயண முன்பதிவை மாற்றிக் கொள்ள முடியும்.
பள்ளி மாணவர்கள்: பள்ளி அல்லது கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் குழுவாக பயணம் செய்ய முன்பதிவு செய்திருப்பார்கள். அதில் யாரேனும் தங்களது பயணத்தை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டால் 48 மணி நேரத்துக்குமுன் தொடர்புகொண்டு, தங்களது பயண டிக்கெட்டை சக மாணவருக்கு மாற்றிக்கொள்ள முடியும். இதற்கு சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் முதல்வர் அல்லது தலைமை ஆசிரியர் சார்பில் ரயில்வே கண்காணிப்பாளருக்கு கடிதம் அளிக்க வேண்டும்.
திருமணம் மற்றும் சுபநிகழ்வுகள்: திருமணம், கோயில் சுற்றுலா, சுற்றுலா உள்ளிட்ட சுப நிகழ்வுகளுக்கு குழுவாகச் செல்ல சிலர் ஆன்லைனில் மொத்தமாக புக்கிங் செய்திருப்பார்கள். அதில் யாராவது பயணத்தை ரத்து செய்துவிட்டால், அந்த பயணக் குழுவின் தலைவர் 48 மணி நேரத்துக்கு முன்னதாக கடிதம் அளித்து, டிக்கெட்டை வேறு நபரின் பெயரில் மாற்றிக் கொள்ளலாம்.
இதேபோல் என்சிசி மாணவர்கள் குழுவாக பயணிக்க முன்பதிவு செய்து, யாரேனும் வர இயலாவிட்டால, சக மாணவருக்கு பயண டிக்கெட்டை பெயர் மாற்றம் செய்து பயணிக்க முடியும்.
இப்படி டிக்கெட்டில் உங்கள் பெயருக்கு பதில் உங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்கள் அல்லது சக மாணவர்கள் பெயரை மாற்றம் செய்ய எந்தக் கட்டணமும் இல்லை. ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்தாலும் பெயர் மாற்றம் செய்து பயணிக்க முடியும்.
நிபந்தனை: எல்லா இடங்களிலும் இப்படி செய்ய முடியாது. முக்கியமான நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களில் முன்பதிவு மையங்களில் மட்டுமேஇந்த கோரிக்கை ஏற்கப்படும். பெயர் மாற்ற கடிதத்துடன் உறவினர் என்பதற்கான அடையாள அட்டையின் நகலை சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்" இவ்வாறு சேலம் கோட்ட அதிகாரிகள் கூறினர்.
இதனிடையே சேலம் கோட்டத்தில், நடப்பாண்டில் ஒருவர் பெயரில் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டை மற்றொருவர் பெயருக்கு திட்டத்தின் மூலம் 126 பேர் பயன் அடைந்துள்ளனர். குறிப்பாக ஈரோட்டில் 42 பேர், கோவையில் 30 பேர், சேலத்தில் 27 பேர், கோவை வடக்கு ரயில் நிலையத்தில் 19 பேர் பயன் அடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications