மேட்டூர் அணை நீர்மட்டம் 37 அடி.. கல்லணையில் தண்ணீர் நிறுத்தம்.. கருகும் பயிர்கள்.. விவசாயிகள் கவலை
சேலம்: மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவை விட அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளதால் 37.85 அடியாக சரிவடைந்துள்ளது. கல்லணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரும் நிறுத்தப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தென்மேற்கு பருவமழை இந்தாண்டு போதிய அளவு பெய்யவில்லை எனக்கூறி கர்நாடக அரசு அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்க மறுத்து வருகிறது. இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அவ்வப்போது அதிகரித்தும், குறைந்தும் வருகிறது.

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து இந்த ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் தஞ்சை மாவட்டம் கல்லணைக்கு வந்தடைந்தது. இதை தொடர்ந்து கல்லணையில் இருந்து நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் ஆர்வமுடன் விவசாய பணிகளில் ஈடுபட்டனர்.மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைந்ததால் தண்ணீர் திறப்பு அளவு குறைந்தது. இதனால் பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி வருகின்றன. பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்
கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து வினாடிக்கு 5473 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் கர்நாடக, தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
இந்த நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் மெயின் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் அவர்கள் காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசலில் சென்றனர்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு மாதம்தோறும் அளிக்க வேண்டிய தண்ணீரை கர்நாடகா முறையாக அளிக்கவில்லை. அதனால் மேட்டூர் அணை-க்கு நீர்வரத்து மிகவும் குறைவாக உள்ள நிலையில் அணையில் இருந்து பாசன தேவைக்காக தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. அணையில் இருந்து பாசனத்துக்கு வினாடிக்கு 6500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இதன் எதிரொலியாக மேட்டூர் அணை நீர்மட்டம் தினமும் குறைந்து கொண்டே வருகிறது. இன்றைய தினம் மேட்டூர் அணை நீர்மட்டம் 37.95 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 93.5 டி.எம்.சி. ஆகும். நேற்றைய நிலவரப்படி அணையில் நீர் இருப்பு 11.18 டி.எம்.சி.ஆக உள்ளது. இதே நிலைமை நீடித்தால் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாத நிலை ஏற்பட்டு விடும்.
மழையும் சரியான அளவில் பெய்யவில்லை என்பதால் மழையை நம்பியும் ஆற்று நீரை நம்பியும் பயிரிட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். குறுவை பாசனத்திற்கு இன்னும் 1 மாதத்திற்கு தண்ணீர் தேவைப்படும். நெற்பயிர்கள் பால் பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் கல்லணையில் திறந்து விடப்பட்ட நீரும் நிறுத்தப்பட்டுள்ளதால் பயிரிட்ட பயிர்களை காப்பாற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரத்தநாடு பகுதியில் தண்ணீர் வரத்து இல்லாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தை பொருத்தவரை குறுவையை நம்பியே தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் உள்ளது. குறுவை பொய்த்ததால் விவசாயிகள் தீபாவளி பண்டிகை கொண்டாட இயலாத நிலை ஏற்படக்கூடும். எனவே வருண பகவான் மனது வைத்தால் மட்டுமே வாழ்வாதாரம் செழிக்கும் என்பது விவசாயிகளின் நம்பிக்கை.












Click it and Unblock the Notifications