சேலத்தில் வித்யா இப்படியா? ஏற்கனவே ரூ.10 சாப்பாட்டில் ரூ.500 ஐ தொலைத்த ஜனம்... இப்ப அரசு வேலையிலும்?
சேலம்: சேலம் விஜயபானு, ரூ.500 கோடி மோசடி செய்து கைதாகி, போலீசாரின் தொடர் விசாரணை வளையத்தில் உள்ளார்.. இதனால், விஜயபானு குறித்த மோசடி தகவல்கள் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த சம்பவத்தின் அதிர்ச்சியே அடங்காத நிலையில், இதே சேலத்தில மீண்டும் ஒரு மோசடி நடந்துள்ளது.. இது தொடர்பான நடவடிக்கையையும் போலீசார் முன்னெடுத்து உள்ளனர். என்ன நடந்தது சேலத்தில்?
கடந்த மாதம் சேலம் அம்மாபேட்டையில் புனித அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை பெயரில் நடந்த பணமோசடி சம்பவமானது தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த அறக்கட்டளையின் நிர்வாகி விஜயபானுதான் மொத்த மோசடிக்கும் மூல காரணமாக திகழ்கிறார்..

10 ரூபாய்க்கு சாப்பாடு
தங்களுடைய அறக்கட்டளையில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவோம், இரட்டிப்பு தொகை தருவோம் என்று ஆசைவார்த்தை சொல்லி உள்ளார். அதுமட்டுமல்ல, பயிற்சியின்போது, 10 ரூபாய்க்கு சாப்பாடு, டீ, காபி, ஸ்நாக்ஸ் வழங்கப்படுவதாக அறிவித்தும், வாழ்வாதாரத்தை உயர்த்துவதாக கூறியும், ஏராளமானோரை பயிற்சி மையத்துக்கு ஈர்த்துள்ளார்.
சேலத்தில் மட்டுமே 2000க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.500 கோடி மோசடி செய்தவராம் இந்த விஜயபானு.. ஆந்திரா, வேலூர் என்று இவரது மோசடிகள் இன்னும் நீள்கின்றன. முதலீடாக 4,31,95,500 கோடியை இழந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் தந்த நிலையில், இது தொடர்பாக விஜய பானு உட்பட 4 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணையும் தீவிரமாகி வருகிறது.
மாற்றுத் திறனாளி - அரசு வேலை
இந்நிலையில், இன்னொரு மோசடி சம்பவம் இதே சேலத்தில் நடந்துள்ளது.. இந்த மோசடியை செய்தவரும் ஒரு பெண் ஆவார்.. அரியலூர் மாவட்டம் செந்தூர் அருகே உள்ளது கீழராயபுரம்.. இங்கு வசித்து வந்த மாற்றுத்திறனாளி இளைஞர் அரவிந்தசாமி (30). இவருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2 லட்சம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டாராம் வித்யா என்ற பெண்.. இவர் செவ்வாய்ப்பேட்டை பகுதி திமுக மகளிரணி அமைப்பாளர் ஆவார்.
எனவே பாதிக்கப்பட்ட அரவிந்தசாமி, செவ்வாய்பேட்டை போலீசில் வித்யா மீது புகார் தந்துள்ளார்.. அந்த புகாரில், "நண்பர் ஒருவர் மூலமாக செவ்வாய்ப்பேட்டையைச் சேர்ந்த வித்யா (39) அறிமுகமானார். இவர் திமுக அரசியல் பிரமுகர்கள் தனக்கு நன்கு அறிமுகம் உள்ளதால், ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடம் பெற்று தருவதாகக் கூறினார்.
சேலம் திமுக நிர்வாகி
இதனை நம்பிய நான், என்னுடைய வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.2 லட்சம் பணத்தை கொடுத்தேன். ஆனால், வித்யா கூறியபடி அரசுப் பணி வாங்கிக் கொடுக்காமலும், பணத்தை திரும்பக் கொடுக்காமலும் மோசடியில் ஈடுபட்டுள்ளார். மேலும், போலி பணி ஆணையை வழங்கி மோசடி செய்துள்ளார். எனவே, இவர் மீது விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் செவ்வாய்ப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, திமுக பெண் நிர்வாகி வித்யா, மாற்றுத்திறனாளியிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2 லட்சம் பெற்று, மோசடியில் ஈடுபட்டது உறுதியானது.. இதையடுத்து, வித்யாவை போலீஸார் கைது செய்து, பெண்கள் கிளை சிறையில் அடைத்தனர். அவரிடம் தொடர் விசாரணை நடக்கிறது. இதுபோல் வேறு யாரிடமாவது பணத்தை பெற்று மோசடி செய்திருக்கிறாரா? என்றும் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications