பட்டு கைத்தறி நெசவாளர்களுக்கு அரசு தரும் சூப்பர் மானியம்.. சேலம் கலெக்டர் வெளியிட்ட குட்நியூஸ்
சேலம்: பட்டு கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு மானியம் வழங்கப்படுகிறது. குறிப்பாக நெசவுத்தொழிலுக்கான எந்திரங்கள் வாங்க பட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் நெசவாளர்களுக்கு தமிழ்நாடு உள்ளிட்ட பொது மாநிலங்கள் பொறுத்த வரையில் மத்திய அரசு மானியமாக 50 சதவீதமும், மாநில அரசு மானியமாக 25 சதவீதமும் வழங்கப்படுகிறது. சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி இது பற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், 'பட்டு கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு மானியம் வழங்கப்படுகிறது. 15-வது நிதிக்குழுவின் 2021-2022 முதல் 2025-2026 வரையுள்ள காலத்திற்கான விவரப்படி பட்டு நெசவுத்தொழிலுக்கான எந்திரங்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளின் மானியத்துடன் பயனாளிகளுக்கு மிகக்குறைந்த விலையில் வழங்கப்படுகிறது.

மினியேச்சர் ஏரி ஸ்பின்னிங் பிளாண்ட் அலகு ஒன்றுக்கு ரூ.80 லட்சம் மதிப்பில் 5 எண்ணிக்கையும், மாற்றியமைக்கப்பட்ட பட்டு கைத்தறிகள், குழி தறி அலகு ஒன்றுக்கு ரூ.41 ஆயிரம் மதிப்பில் 1,600 எண்ணிக்கையும் வழங்கப்படுகிறது. கணினி உதவியுடன் கூடிய ஜவுளி வடிவமைப்பு அலகு ஒன்றுக்கு ரூ.5 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பில் 130 எண்ணிக்கையும், லிப்டிங் அமைப்புடன் கூடிய 720 ஹீக்குகள் கொண்ட மின்னணு ஜக்கார்டு எந்திரம் அலகு ஒன்றுக்கு ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பில் 585 எண்ணிக்கையும் வழங்கப்படுகிறது.
மேலும், ஜக்கார்டு, தார் சுற்றும் எந்திரம், நியுமேட்டிக் லிப்டிங் எந்திரம், பகுதி பாவு சுற்றும் எந்திரம், வைண்டிங் எந்திரம், டப் டையிங், ஆர்ம் டையிங் உள்பட பல்வேறு எந்திரங்களை மானிய விலையில் பெற்றுக்கொள்ளலாம்.
மிகச்சிறிய அளவிலான பட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் நெசவாளர்களுக்கு தமிழ்நாடு உள்ளிட்ட பொது மாநிலங்கள் பொறுத்த வரையில் மத்திய அரசு மானியமாக 50 சதவீதமும், மாநில அரசு மானியமாக 25 சதவீதமும் போக பயனாளிகள் பங்குத்தொகையாக 25 சதவீதம் செலுத்தப்பட வேண்டும். இது தொடர்பான விவரங்களுக்கு சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கைத்தறி துணை இயக்குனர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
