சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதி வேட்பு மனு ஏற்பு.. தேர்தல் அலுவலர் அறிவிப்பு! பின்னணி இதுதான்!
சேலம்: சேலம் திமுக வேட்பாளர் டி.எம். செல்வகணபதி வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது செல்வகணபதியின் வேட்பு மனுவை ஏற்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிகளை உறுதி செய்து, வேட்பாளர்களையும் அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. தமிழ்நாடு 39 தொகுதிகளிலும் 1403 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

சேலம் தொகுதி வேட்பாளர்கள்: சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்பு மனு தாக்கல் செய்தார். பாஜக கூட்டணி சார்பாக பாமக வேட்பாளர் அண்ணாதுரை வேட்புமனு தாக்கல் செய்தார். சேலம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் விக்னேஷ் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில், சேலம் லோக்சபா தொகுதியில் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டது.
செல்வகணபதி வேட்பு மனு நிறுத்தி வைப்பு - என்ன காரணம்?: செல்வகணபதிக்கு 2 தொகுதிகளில் வாக்குரிமை இருப்பதால் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். சேலம் மேற்கு தொகுதியிலும், சேலம் வடக்கு தொகுதியிலும் செல்வக்கணபதிக்கு வாக்குரிமை இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து செல்வகணபதியின் வேட்பு மனு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
வேட்பாளராக போட்டியிடுபவருக்கு இரண்டு இடங்களில் வாக்குரிமை இருப்பது உறுதி செய்யப்பட்டால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 17, 18 படி கிரிமினல் குற்றம் ஆகும். மேலும், இதனால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்படும். இரட்டை வாக்குரிமை சர்ச்சை எழுந்ததால் விளக்கம் கோரப்பட்டுள்ளது. விளக்கம் கொடுக்கும் வரை பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுது. இதனால், செல்வகணபதி மனு பரிசீலனைக்குப் பிறகு ஏற்கப்படுமா? நிராகரிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
இதற்கிடையே, திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார், எதிர் கட்சிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுடுகாடு கொட்டகை ஊழலில் தண்டனை பெற்று, பின்னர் அதிலிருந்து விடுதலை ஆனது, கலர் தொலைக்காட்சி ஊழலில் தண்டனை பெற்று அதிலிருந்து விடுதலை ஆனது தொடர்பான ஆவணங்களை செல்வகணபதி சமர்ப்பிக்கவில்லை என்று கூறி, புகார் தெரிவிக்கப்பட்டது.
திமுக வேட்பாளர் விளக்கம்: அதிமுக ஆட்சேபம் தெரிவித்த காரணத்தால் செல்வகணபதி வேட்பு மனு பரிசீலனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், திமுக வேட்பாளர் செல்வகணபதி சார்பாக, விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது செல்வகணபதியின் வேட்பு மனுவை ஏற்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்துள்ளார்.
திமுக வேட்பாளர் செல்வகணபதி சார்பாக வழக்கறிஞர் விடுதலை, கார்த்திகேயன் ஆகியோர் தேர்தல் அலுவலரிடம் விளக்க கடிதம் அளித்தனர். அதில், 2015ஆம் ஆண்டு செல்வகணபதி சேலம் மேற்கு சட்டசபை தொகுதியில் வசித்துக் கொண்டிருந்து, வடக்கு சட்டசபை தொகுதிக்கு வீடு மாற்றம் செய்தபோதே வாக்காளர் பட்டியலில் நீக்கம் செய்ய கடிதம் அளித்துள்ளார்.
ஆதாரம் சமர்ப்பிப்பு: ஆனால், செல்வகணபதி கோரிக்கையின்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்படவில்லை என்று தெரிகிறது எனக் குறிப்பிட்டுள்ளதோடு, நீக்கல் கடிதம் அளித்ததற்கான ஆதாரத்தையும் சமர்ப்பித்துள்ளனர். இதையடுத்து, செல்வகணபதியின் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் செல்வகணபதி மனு நிறுத்தி வைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது அவரது வேட்பு மனு ஏற்கப்பட்டிருப்பதன் காரணமாக திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் இடையே நிம்மதி ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications