சறுக்கிய பாய்.. கன்னத்தில் இறங்கிய கத்தி! சபாஷ் சேலம் மருத்துவர்களுக்கு! பெற்றோர்களே ரொம்ப கவனம்!
சேலம்: வீட்டில் தரையில் இருந்த கோரைப்பாய் சறுக்கியதில் தடுமாறி விழுந்த குழந்தையின் கையில் இருந்த கத்தி முகத்தில் குத்தி, மூளையின் நடுப்பகுதி வரை சென்ற நிலையில், கடவுளாக மாறி காப்பாற்றியுள்ளனர் சேலம் அரசு மருத்துவர்கள். மகனை மீட்ட மருத்துவர்களுக்கு பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி கூறியுள்ளனர்.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சேலம் மாவட்டம் மட்டுமில்லாமல் ஈரோடு, நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட மக்கள் உயர்சிகிச்சை பெறும் இடமாக சிறந்து விளங்கி வருகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் வந்த மக்களுக்கு சிறப்பான முறையில் அறுவை சிகிச்சைகள் மூலம் உயிர் காக்கும் சிகிச்சை தொடர்ந்து அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சேலம் கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்த தியாகராஜன் என்பவரது மகன் ரோகித் என்ற ஐந்து வயது சிறுவன் வீட்டில் விளையாடி கொண்டு கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக முகத்தில் கத்தி குத்தப்பட்ட நிலையில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

கத்தி மூளையின் நடுப்பகுதிக்கு சென்று குத்திய நிலையில் இருந்ததால் மருத்துவர்கள் உடனடி சிகிச்சைகளும் மேற்கொண்டனர். உடனடியாக முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு மூளை மற்றும் ரத்தம் குழாய் தொடர்பான பரிசோதனை செய்யப்பட்டது. கத்தி முகத்தில் உள்ள எலும்புகளை ஆழமாக துளைத்து இருப்பது, மண்டையைத் துளைத்து சென்று மூளையில் உள்ள ஒரு பெரிய ரத்த நாளத்தை தொட்டிருப்பதும் தெரியவந்தது.
பின்னர் கத்தியின் நுனி மண்டை ஓட்டின் அடிப்பகுதி வரை துளைத்திருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். உடனடியாக மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை துறை மருத்துவர்கள் குழுவினர் குழந்தைக்கு அறுவை சிகிச்சை மூலமாக கத்தியை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அறுவை சிகிச்சை குழு, சிறுவனின் மண்டை ஓட்டின் அடிப்பகுதியில் இருந்த கத்தியை, ரத்தநாளத்திற்கு சேதம் ஏற்படுத்தாமல் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து அகற்றினர்.
குறிப்பாக இந்த அறுவை சிகிச்சைக்கு பல்வேறு துறை மருத்துவர்கள் ஒன்றிணைந்து சரியான நேரத்தில் சரியான சிகிச்சை அளித்ததால் சிறுவனின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சிறப்பான முறையில் செயல்பட்ட மருத்துவர்கள் அனைவருக்கும் சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் தேவி மீனா பாராட்டு தெரிவித்தார்.
பெற்றோர்கள் கவனம்: தற்போது சிறுவன் குணமடைந்து நலமாக இருக்கும் நிலையில் மகனை உயிருடன் மீட்ட மருத்துவர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி கூறியுள்ளனர் பெற்றோர்கள். அதே நேரத்தில் வீட்டில் சிறுவர்கள் இருக்கும் நிலையில் பெற்றோர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள், கத்தி, அரிவாள், ஊசி உள்ளிட்டவற்றை சிறுவர்களுக்கு எட்டும் இடத்தில் வைக்க கூடாது. மேலும் டிவி ரிமோட், ரிமோட் கார், எல்இடி லைட் உள்ளிட்டவற்றையும் சிறுவர்களுக்கு அருகே வைப்பதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர்.
ரிமோட் உள்ளிட்டவற்றை சிறுவர்கள் வாயில் வைக்கும் போது அதில் இருக்கும் எல்இடி லைட் வாய் வழியே சென்று நுரையீரலில் சிக்க வாய்ப்பு இருக்கிறது. இதற்கு முன்பும் இதுபோல பல சம்பவங்கள் நடைபெற்றிருக்கிறது. எனவே ஒரு வயது முதல் பத்து வயது வரை வீட்டில் சிறுவர் சிறுமியர் இருந்தால் பெற்றோர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். ஒருவேளை ஏதாவது பிரச்சனை இருந்தாலும் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கோ அல்லது தனியார் மருத்துவமனைக்கோ அழைத்து வரவேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதே சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்திருந்தால் பல லட்சம் ரூபாய் செலவாகி இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications