கிளாஸ்ரூமில் சினிமா பாட்டு பாடிட்டே ஆபாச பேச்சு.. மாணவியரின் உடலமைப்பை வர்ணித்த ஆசிரியர்! சேலம் ஷாக்
சேலம்: தமிழகத்தில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன... திருநெல்வேலியில் 8-ம் வகுப்பு மாணவர், ஆம்பூரில் 2-ம் வகுப்பு சிறுமி என அடுத்தடுத்து பள்ளி ஆசிரியர்கள் மீது பாலியல் புகார்கள் எழுந்துள்ளன. இப்போது சேலத்திலும் பள்ளி மாணவியரிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாக ஆசிரியர் மீது புகார் எழுந்து, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.. என்னதான் நடந்தது சேலம் அரசு பள்ளியில்?
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே அழகப்பம்பாளையம்புதூரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு முதுகலை இயற்பியல் ஆசிரியராக 45 வயதான விஜயகுமார் பணியாற்றி வருகிறார். இவர் பள்ளி நேரத்தில் மாணவியரிடம் அநாகரிகமாக நடந்துகொள்வதாக புகார் எழுந்தது.

சேலம் அரசு பள்ளி
குறிப்பாக, கிளாஸ் ரூமில், மாணவிகளிடம் பாடம் நடத்தால், சினிமா பாட்டுகளை பாடுவாராம்.. ஆபாசமாகவும் பேசி வந்துள்ளார்.. இயற்பியல் பாடம் நடத்தும்போது, மாணவிகளின் உடலமைப்பை வர்ணித்தும் பேசியிருக்கிறார்..
ஆசிரியரின் இந்த நடவடிக்கைகளை கண்டு மாணவிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. ஒருகட்டத்தில் அவரது செய்கைகளை தாங்காமல், இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் பால்ராஜிடம் தெரிவித்துள்ளனர்.. இந்த தகவல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பனிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.. பிறகு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கும் இது தொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டது.
தூக்கியடிக்கப்பட்ட ஆசிரியர்
இதைத்தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள், உடனடியாக பள்ளிக்கு வந்து, விசாரணையை நடத்தினார்கள்.. இந்த விசாரணையில் ஆசிரியர் மீதான புகார்கள் உறுதி செய்யப்பட்டதையடுத்து, சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் கடந்த 1-ம் தேதி வழக்குப்பதிவு செய்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) வசந்தகுமாரி தலைமையிலும் தனியாக விசாரணை நடத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பன் உத்தரவிட்டார். அதன்படி பள்ளிக்குச சென்ற வசந்தகுமாரி, அங்குள்ள மாணவியர் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பித்தார்.
இந்த அறிக்கையின் அடிப்படையில் ஆசிரியர் விஜயகுமாரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பன் தற்போது அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்..
யார் இந்த விஜயகுமார்
இதில் இன்னொரு அதிர்ச்சியான தகவலும் வெளியாகியுள்ளது. ஆசிரியர் விஜயகுமார் ஏற்கனவே ஏற்காட்டில் பணியாற்றியபோதும் இதேபோன்ற ஆபாச புகாரில் சிக்கினாராம். அங்கேயும் இதே போல புகார்கள் முளைத்துள்ளது.. இதன் காரணமாகவே அங்கிருந்து டிரான்ஸ்பர் செய்யப்பட்டு சேலம் மாவட்டத்துக்கு வந்திருக்கிறார்.. ஆனால், இங்கேயும் அதேபோல வேலையை காட்டவும், இப்போது வேலையிலிருந்து தூக்கியடிக்கப்பட்டுள்ளார்.
17A விதியின் கீழ் விளக்கம் கேட்டு நோட்டீஸ்
அதேபோல இந்த விவகாரத்தில் புகார் அளித்தது தொடர்பாகவும் புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர் பால்ராஜ் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் உமா சங்கர் ஆகியோர் இந்த விவகாரம் தொடர்பாக முரண்பட்ட தகவல்களை தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது. அதனால் அவர்கள் 2 பேரிடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மேலும், 17A விதியின் கீழ் விளக்கம் கேட்டு நோட்டீஸும் வழங்கப்பட்டுள்ளது.
2 நாட்களுக்கு முன்புகூட திருநெல்வேலியில் 8-ம் வகுப்பு மாணவர், ஆம்பூரில் 2-ம் வகுப்பு சிறுமி என அடுத்தடுத்து பள்ளி ஆசிரியர்கள் மீது பாலியல் புகார்கள் எழுந்து போக்சோவிலும் கைதாகி உள்ளனர்.. இப்போது சேலத்திலும் இதுபோன்ற புகார் வெளியாகியுள்ளது.
சிங்கப்பெண் படை எங்கே
பள்ளிக்கு அனுப்பும் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் பெற்றோர் அவர்களை அனுப்புகின்றனர். ஆனால், ஆசிரியர்கள் மீதே தொடர்ந்து புகார்கள் எழுவது பெற்றோர்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு கல்வித்துறைக்கும் அரசுக்கும் உள்ளது. புகார்கள் எழுந்த பிறகு நடவடிக்கை எடுப்பதோடு நின்றுவிடாமல், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது தமிழக அரசு என்பதே இப்போது எழும் முக்கியமான கேள்வி.
அதைவிட முக்கியமாக, பள்ளிக்குச் செல்லும் பெண் குழந்தைகளுக்கே பாதுகாப்பு இல்லாத சூழலா என்ற கேள்வி எழுந்துள்ளது.. "சிங்கப்பெண் படை" என்று பெருமையாகப் பேசும் தவெக அரசை நோக்கியும் இப்போது இந்தக் கேள்வி நீள்கிறது...!!!


Click it and Unblock the Notifications
