தைப்பூசம்: 'மருமகன்' முருகனுக்கு சீர்வரிசையுடன் சென்ற 'குறவர்' மக்கள்- முருகனை வழிபாடு செய்த மயில்!
சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டத்தில் உள்ள வடசென்னிமலை பாலசுப்பிரமணியர் கோவில் திருக்கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தங்களது இனப் பெண்ணான வள்ளியை திருமணம் செய்த 'மருமகன்' முருகப் பெருமானுக்கு குறவர் இன மக்கள் தேன், திணை, மா, பலா, வாழை உள்ளிட்ட பொருட்களை சீர்வரிசையாக கொண்டு சென்று வழங்கும் நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது.
உலகம் முழுவதும் தமிழர் வாழும் பகுதிகளில் எல்லாம் முருகன் ஆலயங்களில் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நேற்று நடைபெற்றது. தமிழ்நாட்டின் அறுபடை வீடுகளிலும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் பெருந்திரளாக ஒன்று திரண்டிருந்தனர். பல்வேறு வகையான காவடிகளுடன் பாதயாத்திரையாக வந்து தைப்பூச திருநாளில் முருகப் பெருமானை மனமுருக பக்தர்கள் வேண்டி தரிசனம் செய்தனர். தைப்பூச திருநாளில் பல்வேறு கோவில்களில் தேரோட்ட நிகழ்வும் நடைபெற்றது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் காட்டுக்கோட்டை வடசென்னிமலை பாலசுப்பிரமணியர் திருக்கோவிலில் நடைபெற்ற நிகழ்வு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. குறிஞ்சி நிலக் கடவுளான முருகப் பெருமான், ஆதி தமிழ் குடியான குறவர் இனத்தைச் சேர்ந்த வள்ளியை திருமணம் செய்து கொண்டார் என்பது புராணம். இதனடிப்படையில் வடசென்னை பாலசுப்பிரமணியர் திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள முருகப் பெருமானுக்கும் வள்ளி தாயாருக்கும் ஆதி தமிழ் குடிகளாக குறவர் இன மக்கள் 30 தட்டுகளில் சீர்வரிசை கொண்டு சென்று செலுத்தினர்.
தங்களது இனத்து மருமகனான முருகப் பெருமானுக்கும் வள்ளி தாயாருக்கும் தேன், திணை, மா, பலா, வாழை, கிழங்குகள், வளையல், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பொருட்களுடன் 30 சீர்வரிசை தட்டுகளை சுமந்தபடி குறவர் இன மக்கள் பெருந்திரளாக சென்றனர். அப்போது குறவர் இன மக்கள் தங்களது தனித்துவ பண்பாட்டு அடையாளமான காவல்காரர்களுக்கான வேல் கம்பையும் எடுத்துச் சென்று முருகப் பெருமானையும் வள்ளி தாயாரையும் மனமுருக வழிபட்டனர்.

முருகனை வழிபட்ட மயில்
இதேபோல ஈரோடு மாவட்டம் கோபி பச்சைமலை சுப்பிரமணியன் சுவாமி கோவிலிலும் தைப்பூச நாளில் ஒரு சுவாரசிய நிகழ்வு நடைபெற்றது. தைப்பூச திருநாளை முன்னிட்டு நேற்று மாலை தங்கரதம் புறப்பாடு நடைபெற்றது. அப்போது கோவில் வளாகத்தில் வலம் வந்து கொண்டிருந்த மயில் திடீரென தேரின் முன்புறம் சென்றது. பின்னர் முருகனை தரிசனம் செய்வது போல சில நிமிடங்கள் தங்க தேரிலேயே நின்று கொன்டிருந்தது. இதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்திலும் அலங்கரிக்கப்பட்ட முருகன் சிலை முன்பாக நின்றும் மயில் சாமி தரிசனம் செய்தது. தைப்பூசத் திருநாளில் முருகப் பெருமானை மயில் தரிசனம் செய்த நிகழ்வு பக்தர்களை பரவசப்படுத்தியது.












Click it and Unblock the Notifications