அன்வர் ராஜா கமெண்ட்.. அதிமுக - பாஜக பொருந்தா கூட்டணி.. களப்பணியில் சிக்கல்.. திருமாவளவன் அட்டாக்!
சேலம்: அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுக்கு இடையில் இருப்பது கூட்டணி என்று சொல்லிக் கொண்டால் கூட, அது பொருந்தா கூட்டணி என்று விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். ஒரு பொருந்தா கூட்டணியை உருவாக்கி கொண்டு ஆட்சியை கைப்பற்றுவோம் என்று சொல்வது நேர் முரணாக இருப்பதாகவும், கூட்டணி ஆட்சி என்ற அமித்ஷாவின் கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் உறுதியான பதில் அளிக்கப்படவில்லை என்றும் கூறி இருக்கிறார்.
தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற துடிக்கும் எண்ணம், ஒருநாளும் நடக்காது என்று அதிமுக அமைப்பு செயலாளர் அன்வர் ராஜா தெரிவித்துள்ளார். அதிமுக - பாஜக இடையில் இருப்பது தேர்தல் ஒப்பந்தம் என்று கூறிய அன்வர் ராஜா, தமிழ்நாட்டை பொறுத்தவரை கூட்டணிக்கு தலைமை தாங்கப் போவது அதிமுக தான். அதற்கு தலைவர் எடப்பாடி பழனிசாமி தான்.

அன்வர் ராஜா கருத்து
அதில் எந்த மாற்றுக்கருத்திற்கும் இடம் கிடையாது. இதனை பாஜக ஏற்கவில்லை என்றால், இரு கட்சிகளுக்கு இடையில் ஒருங்கிணைப்பு சாத்தியம் இல்லை. முதல்வர் வேட்பாளர் தொடர்பாக டெல்லியின் எண்ணம் வேறாக இருந்தால், அதனை அதிமுக தவிடுபொடியாக்கும் என்று தெரிவித்தார். அன்வர் ராஜாவின் இந்த கருத்து அதிமுகவின் கருத்தாகவே பார்க்கப்படுகிறது.
திருமாவளவன் பேட்டி
பாஜகவிற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் விடுக்கப்பட்டுள்ள மறைமுக எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுக்கு இடையில் இருப்பது கூட்டணி என்று சொல்லிக் கொண்டால் கூட, அது பொருந்தா கூட்டணி. அவர்களால் மனம் ஒத்து களப்பணி செய்வது அவ்வளவு எளிதான காரியமில்லை.
இபிஎஸ் விளக்க வேண்டும்
ஒரு பொருந்தா கூட்டணியை உருவாக்கி கொண்டு ஆட்சியை கைப்பற்றுவோம் என்று சொல்வது நேர் முரணாக உள்ளது. அமித்ஷா மீண்டும் மீண்டும் கூட்டணி ஆட்சி அமைப்போம் என்கிறார். அதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து உறுதியான பதில் இல்லை. தனிப்பெரும்பான்மையோடு அதிமுக ஆட்சி அமைக்கும் என்று சொல்லி இருப்பதன் மூலமாக, கூட்டணி ஆட்சியை மறுக்கிறார் என்று புரிந்து கொள்கிறோம்.
முதல்வர் யார்?
ஆனால் நேரடியாக தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைவதற்கு அதிமுக உடன்படவில்லை அல்லது ஏற்காது என்ற அறிவிப்பை வெளியிடவில்லை. அதேபோல் இது தேசிய ஜனநாயக கூட்டணி என்று பாஜகவினர் கூறுகிறார்கள். அதிமுக தலைமையிலான கூட்டணியா அல்லது பாஜக தலைமையிலான கூட்டணியா? தேசிய ஜனநாயக கூட்டணி என்றால், அது பாஜக தலைமையிலான கூட்டணி என்றாகிவிடும். முதலமைச்சர் யார் என்பதை தேர்தலுக்கு பின் அமித்ஷா, மோடி முடிவு செய்வார் என்று பாஜக சொல்கிறது.
விஜய் சுற்றுப்பயணம்
இதற்கு எடப்பாடி பழனிசாமி உரிய விளக்கத்தை தருவார் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதேபோல் தேர்தல் நேரத்தில் தலைவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வது வழக்கமானது தான். தவெக தலைவர் விஜய் அந்த வகையில் பயணம் செல்லவிருக்கிறார். தேர்தல் அரசியல் வேறு.. திரைப்பட வெற்றி வேறு.. சினிமாவில் வெற்றி பெற்றவர்கள் எல்லோரும் தேர்தல் அரசியலில் வெற்றி பெற்றார்கள் என்று சொல்லிவிட முடியாது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications