2024 மக்களவைத் தேர்தல்! சேலம் தொகுதியை குறிவைக்கும் வீரபாண்டி ஆறுமுகம் வாரிசு! கே.என்.நேரு சாய்ஸ்?
நாடாளுமன்றத் தேர்தலில் எம்.பி.சீட் வாங்கும் முயற்சியில் வீரபாண்டி ஆறுமுகம் மகன் பிரபு.
சேலம்: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட மறைந்த திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய மகன் பிரபு காய் நகர்த்தி வருகிறார்.
மருத்துவரான இவர் சேலத்திலேயே முழுமையாக முகாமிட்டு கட்சிப்பணிகளில் தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே சிட்டிங் எம்.பி.யான பார்த்திபனும் மீண்டும் சீட் கேட்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சரான கே.என்.நேருவின் சாய்ஸ் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

2024 நாடாளுமன்றத் தேர்தல்
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முழுமையாக இன்னும் ஓரண்டு கூட இல்லாததால் அது தொடர்பான பரபரப்பு இப்போதே பற்றிக்கொண்டது. நாம் ஏற்கனவே கூறியிருந்ததை போல் நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை கவனிக்க ஆரம்பித்துவிட்டார் முதல்வர் ஸ்டாலின். இதனிடையே எம்.பி. சீட் வாங்குவதற்காக திமுக பிரமுகர்கள் பலரும் கட்சித் தலைமையிடம் இப்போதே காய் நகர்த்த தொடங்கிவிட்டனர். அந்த வகையில் சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டும் வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய மகன் மருத்துவர் பிரபு தொகுதியை சுற்றி வர ஆரம்பித்துள்ளார்.

மருத்துவர் பிரபு
வீரபாண்டி ஆறுமுகத்தை பொறுத்தவரை ஒரு காலத்தில் சேலம் மாவட்ட திமுகவின் முகமாக திகழ்ந்தவர் என்பதோடு மட்டுமல்லாமல் திமுகவிலும் மூத்த முன்னோடியாக இருந்து மறைந்தவர். இவரது இளைய மகனும் மருத்துவருமான பிரபு முழுநேர அரசியல்வாதியாக மாறி கட்சிப்பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போதே பிரபு எம்.எல்.ஏ. சீட் எதிர்பார்த்தார். தனது தந்தை மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் மீது அளவுகடந்த மரியாதை வைத்திருக்கக் கூடிய அமைச்சர் கே.என்.நேரு தனக்கு பரிந்துரை செய்வார் என மருத்துவர் பிரபு நம்புகிறார்.

பார்த்திபன் எம்.பி.
இதனிடையே சேலம் நாடாளுமன்றத் தொகுதியின் சிட்டிங் எம்.பி.யான பார்த்திபனும் மீண்டும் சீட் கேட்கும் எண்ணத்தில் இருக்கிறார். இதற்காக அவரும் தனி ரூட்டில் பயணிக்க ஆரம்பித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனை அடிக்கடி சந்திக்கிறார். இது மட்டுமல்லாமல் இதற்காக தனி லாபியும் நடத்தி வருகிறாராம்.

கே.என்.நேரு சாய்ஸ்?
இவர்கள் இருவர் மட்டுமின்றி இன்னும் பலரும் எம்.பி. சீட் ரேஸில் இருக்கிறார்கள். இதனிடையே சேலம் தொகுதியில் போட்டியிட யார் வேண்டுமானாலும் சீட் கேட்கலாம். ஆனால் அமைச்சர் கே.என்.நேரு யாரை பரிந்துரை செய்யப் போகிறார் என்பதும் அவரது சாய்ஸ் யாராக இருக்கும் என்பதும் தான் இங்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications