அட! அச்சு அசலாக அப்படியே.. திமுக இளைஞரணி மாநாட்டிற்கு தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்த AI கருணாநிதி
சென்னை: திமுக இளைஞரணி மாநாடு நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நிலையில், இதற்காக மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி வாழ்த்து சொல்வது போன்ற ஏஐ வீடியோ இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது.
திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு சேலம் மாவட்டத்தில் உள்ள பெத்தநாயக்கன்பாளையத்தில் நாளை (ஜனவரி 21) நடைபெறுகிறது. இந்த மாநாடு முதலில் டிசம்பர் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

பிறகு மழை உள்ளிட்ட காரணங்களால் இந்த மாநாடு இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்டது. இதற்கிடையே இந்த மாநாடு சேலத்தில் நாளை (ஜனவரி 21) நடைபெறுகிறது. இதற்காக மாநாடு நடக்கும் இடத்தில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேடைகள்: பிரம்மாண்ட மேடை போடப்பட்டுள்ள நிலையில், பந்தல்கள், சேர்கள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாநில உரிமை மீட்பு முழக்கத்தோடு இந்த மாநாடு சேலத்தில் நடைபெறுகிறது. இந்த மாநில மாநாட்டிற்குத் தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளில் இருந்தும் இளைஞரணியை சேர்ந்தவர்கள் சாரை சாரையாகக் குவிந்து வருகின்றனர். இதில் பங்கேற்க ஏற்கனவே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சேலம் சென்றடைந்துவிட்டார்.
இன்று அங்கே டிரோன் காட்சி ஒத்திகை நடைபெற்றது. அதில் திமுகவின் முக்கிய தலைவர்களின் படங்கள் டிரோன் மூலம் காட்சிப்படுத்தப்பட்டன. இது தொடர்பான போட்டோ வீடியோ இணையத்தில் டிரெண்டானது. இதற்கிடையே இணையத்தில் மற்றொரு வீடியோ டிரெண்டாகி வருகிறது. ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட அந்த வீடியோ மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி இளைஞரணி மாநில மாநாட்டிற்காக வாழ்த்து சொல்வது போல இருக்கிறது.
AI கருணாநிதி: இணையத்தில் பரவும் அந்த வீடியோவில், "இளைஞரணி முதல் மாநில மாநாடு வெள்ளி விழா மாநாடாகச் சிறப்பாக நடைபெற்றது. இதுதான் அடுத்த தலைமுறையினரைக் கழகத்தின் பக்கம் ஈர்த்தது.
1970இல் திருச்சியில் நடந்த கழக மாநில மாநாட்டில் நான் ஐம்பெரும் முழக்கங்களை முழங்கினேன். அதில் ஐந்தாவது முழக்கம் மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதாகும். இதைத் தான் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கொள்கை.
வாழ்த்து: இப்போது 2024இல் நடக்கும் லோக்சபா தேர்தலை நாம் எதிர்கொள்ளும் நிலையில், ஜனநாயக போர்க்களத்திற்குக் கழக வீரர்களை ஆயத்தப்படுத்தும் பயிற்சி பாசறையாக அமைகிறது இளைஞரணி மாநில மாநாடு. அந்த கொள்கையை மீட்டெடுக்கத் தம்பி உதயநிதி தலைமையில் மாங்கனி மாவட்டமான சேலத்தில் கழக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறுகிறது" என்று கூறுகிறார்.
ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட இந்த வீடியோ இணையத்தில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது. திமுக தொண்டர்கள் நிர்வாகிகள் பலரும் இந்த வீடியோவை டிரெண்ட் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications