சேலத்தில் நள்ளிரவில் பைக்கில் சென்ற போலீஸ் ஏட்டு.. திடீரென காலியான பெட்ரோல்.. காத்திருந்து வந்த எமன்
சேலம்: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அரசநத்தம் பகுதியை சேர்ந்த அன்புராஜ் சேலம் கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் பணி முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் உறவினரை பார்க்க சென்றுள்ளார். பின்னர் நள்ளிரவில் வீடு திரும்பி உள்ளார். போகும் வழியில் பெட்ரோல் தீர்ந்து போனது.. இதையடுத்து சேலத்தில் பெட்ரோல் வாங்கிவிட்டு சாலையை கடக்க முயன்றார்.. அப்போது ஒரு லாரி இவருக்கு எமனாக மாறியது.
இருசக்கர வாகனத்தில் நள்ளிரவில் செல்லும் போது கவனமாக செல்ல வேண்டும். சாலையை கடக்க முயலும் போது மிகவும் கவனமாக செல்ல வேண்டும். குறிப்பாக பெங்களூர் நெடுஞ்சாலை, சென்னை நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து மிக அதிகமாக இருக்கும். சிக்னல் இல்லை என்றால் கடப்பது கூட கடினம். அப்படிப்பட்ட சாலையில் கவனமாக இல்லாவிட்டால், விபரீதம் நடக்கும் வாய்ப்புகள் அதிகம். அப்படித்தான் சேலத்தில் நடந்துள்ளது.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அரசநத்தம் பகுதியை சேர்ந்த அன்பு ராஜ்க்கு 40 வயது ஆகிறது. இவர் சேலம் கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி மாதேஸ்வரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அன்புராஜ் தனது குடும்பத்துடன் கன்னங்குறிச்சியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார்.
இவர் கடந்த அக்டோபர் 6ம் தேதி பணி முடிந்த பின்னர், இருசக்கர வாகனத்தில் ஆத்தூரில் உள்ள உறவினர்களை பார்க்க சென்றார். பின்னர் அவர் அங்கு உறவினர்களை பார்த்துவிட்டு நள்ளிரவில் பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார். காரிப்பட்டி போலீஸ் நிலையத்தின் அருகே வந்து கொண்டிருந்தபோது அவரது பைக்கில் திடீரென பெட்ரோல் தீர்ந்து விட்டது.
இதனால் ஏட்டு அன்புராஜ் மோட்டார் சைக்கிளை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு மின்னாம்பள்ளி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு வந்தார். அங்கு பாட்டிலில் பெட்ரோல் வாங்கி விட்டு மீண்டும் நடந்து சென்றார். அப்போது அங்குள்ள சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக சென்ற லாரி அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அன்புராஜை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அன்புராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பாக காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து, லாரி டிரைவர் வாழப்பாடியை சேர்ந்த சுரேஷ் (37) என்பவரை கைது செய்தனர். இதனிடையே போலீஸ் ஏட்டு அன்புராஜ் விபத்தில் பலியானதை தொடர்ந்து சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி அரசு மருத்துவமனைக்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவருடைய குடும்பத்தினரிடம் இறுதி சடங்கு செய்வதற்கான ரூ.1 லட்சம் நிதியை அவர் வழங்கினார். இந்த விபத்து போலீசாரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications