ரூ.33 கோடி பணம்.. யார் அந்த வக்கீல்? சேலம் மாடு லோன் மோசடியில் புதிய ட்விஸ்ட்
சேலம்: வங்கியில் கடன் வாங்காதவர்களின் பெயரில் ரூ.1 லட்சம் மாடு லோன் பெறப்பட்டு, ரூ.50 கோடி வரை மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.. இதுக்காக கல்லூரி மாணவர்கள், வேலை இல்லாதவர்களின் ஆதார் விவரங்களை பயன்படுத்தியதாக சொல்லப்படும் நிலையில், இப்போது வங்கி அதிகாரிகளுக்கும் இந்த மோசடியில் தொடர்பு இருக்கிறதா என்று போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் அரசு வக்கீல் ஒருவரின் பெயரும் அடிபடுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யார் அவர்?
சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் கண்ணகி என்பவர் அறக்கட்டளை நடத்தி வந்துள்ளார். இவரது அலுவலகத்தில் முத்துக்குமரன், மோனிஷா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வந்துள்ளனர்.

சேலம் விவசாயக் கடன்
இந்த அறக்கட்டளை மூலமாக வங்கிகளில் கடன் பெற்றுக் கொடுக்கும் வேலைகளையும் செய்து வந்துள்ளனர். குறிப்பாக, மாடு வாங்கி வளர்ப்பதற்காக வங்கிகள் வழங்கும் ரூ.1 லட்சம் கடனைப் பயன்படுத்தி மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இதற்காக கல்லூரி மாணவர்கள், வேலை இல்லாதவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுடைய ஆதார் அட்டைகளை வாங்கியிருக்கிறார்கள்.. பிறகு அவர்களுக்கு தெரியாமலேயே மாடு வாங்குவதற்கான கடனுக்கு விண்ணப்பித்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்டவர்களின் செல்போன் நம்பரையும் பயன்படுத்தியுள்ளனர். ஒவ்வொருவருக்கும் ரூ.1,000 கமிஷன் கொடுத்து இந்த செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள்.
ரூ.1,000 கமிஷன்.. முஷ்ரப் பாஷா புகார்
இந்த மோசடி தொடர்பாக சேலம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் முஷ்ரப் பாஷா (22) என்பவர், சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். அந்தப் புகார் மனுவில் அவர் தெரிவித்திருப்பதாவது:
"அறக்கட்டளைக்கு சொந்தமான பணம் உங்களது வங்கி கணக்கிற்கு வரும். அதனை குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு மாற்ற வேண்டும். இவ்வாறு செய்தால் உடனடியாக ரூ.1000 கொடுக்கப்படும் என்றனர். இதன்படியே எனது வங்கி கணக்கிற்கு பணம் வந்தது. அவர்கள் கூறியபடியே ரூ.1000 கொடுத்தனர். ஆனால் தற்போது வங்கியில் நான் ரூ.1 லட்சம் கடன் வாங்கியதாக நோட்டீஸ் வந்துள்ளது. என்னை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்த புகார் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. உதவி கமிஷனர் சரண்யாதேவி, இன்ஸ்பெக்டர் சந்திரகலா ஆகியோர் விசாரணை நடத்தினர்.
இதுவரை 6 பேர் கைது
இந்த வழக்கில் அறக்கட்டளை நடத்தி வந்த கண்ணகி (40), முத்துக்குமரன் ஆகியோரை போலீசார் முதலில் கைது செய்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அறக்கட்டளையில் வேலை செய்து வந்த மோனிஷா உள்ளிட்ட 10 பேர் தலைமறைவானது தெரியவந்தது. அவர்களை போலீசார் தேடி வந்த நிலையில், மோனிஷா, அஜித்குமார், கிஷோர்குமார் உள்ளிட்ட மேலும் 4 பேரைக் கைது செய்தனர். இதுவரை இந்த வழக்கில் மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே, வங்கிகள் மூலம் சுமார் 7,000 பேருக்கு மாடு வாங்குவதற்கான கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் ரூ.50 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளதாகவும் புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.. எனவே, இந்த பணம் எப்படி பயன்படுத்தப்பட்டது, இன்னும் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்தெல்லாம் போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.
வங்கி அதிகாரிகளுக்கும் தொடர்பா?
அதுமட்டுமல்ல, இந்த மோசடியில் வங்கி அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக மற்றொரு தகவல் கசிந்துள்ளது.. ஆயிரக்கணக்கானோரின் பெயரில் மாடு வாங்குவதற்கான கடன் பெறப்பட்டுள்ள நிலையில், வங்கிகளில் இந்தக் கடன் விண்ணப்பங்கள் எப்படி சரிபார்க்கப்பட்டன? உரிய ஆவணங்கள் இல்லாமல் கடன் வழங்கப்பட்டதா? இதில் வங்கி அதிகாரிகள் யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக வங்கி அதிகாரிகளிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
யார் அந்த அரசு வக்கீல்?
இந்த மோசடி விவகாரத்தில் அரசு வக்கீல் ஒருவரின் பெயரும் அடிபடுகிறது.. போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகாரில், தனது வக்கீல் மூலமாக ரூ.33 கோடி வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக கண்ணகி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அவ்வளவு பெரிய தொகை எதற்காக வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது? அந்த வக்கீல் யார்? அவர் அரசு வக்கீலா? இந்தப் பணப் பரிவர்த்தனைக்கும் மாடு லோன் மோசடிக்கும் என்ன தொடர்பு? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதுதொடர்பாகவும் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆக, வெறும் ரூ.1,000 கமிஷன் கொடுத்து ஆதார் விவரங்களை பெற்றதாக கூறப்படும் இந்த விவகாரம், இப்போது ரூ.50 கோடி மோசடி, வங்கி அதிகாரிகள் மீதான சந்தேகம், அரசு வக்கீல் தொடர்பான விசாரணை என அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்ந்து, சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது..!!




Click it and Unblock the Notifications
