தமிழகத்தில் முதலீடு செய்ய ஆர்வம்! விரைவில் நல்ல தகவல்! ஸ்டாலினை ஹேப்பியாக்கிய தலைமை செயல் அலுவலர்கள்
சிங்கப்பூர்: சிங்கப்பூர் நாட்டு தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
அப்போது செம்ப்கார்ப் (Sembcorp) மற்றும் கேப்பிட்டா லேண்ட் (CapitaLand) நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர்கள் தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளதாகவும், விரைவில் அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்வதாகவும் உறுதி அளித்தனர்.

செம்ப்கார்ப் (Sembcorp) நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் கிம்யின் வாங்கை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். இச்சந்திப்பின்போது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் தமிழ்நாடு இந்தியாவின் மிக முக்கியமான மாநிலம் என்றும், எரிசக்தி தொடர்பான பல்வேறு பிரிவுகளில் செம்ப்கார்ப் நிறுவனம் தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறையுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக் கொண்டார்.
குறிப்பாக, pumped hydro storage திட்டங்களுக்கான வழிமுறைகளை தற்போது இந்திய அரசு எளிமையாக்கி உள்ளதால், PPP முறையில் இந்தத் திட்டங்களை தமிழ்நாட்டில் செம்ப்கார்ப் நிறுவனம், தமிழ்நாடு அரசுடன் இணைந்து கூட்டாக நிறைவேற்றிட கேட்டுக் கொண்டார்.
மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிகுந்த அக்கறையுடன் செயல்படும் தமிழ்நாடு அரசு பல்வேறு புதிய முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதால், பசுமை எரிசக்தி உற்பத்திக்குத் தேவையான நவீன தொழில்நுட்பங்கள் தமிழ்நாட்டிற்கு தேவைப்படுவதை குறிப்பிட்டு, செம்ப்கார்ப் நிறுவனத்தின் தொழில்நுட்ப பலம் தமிழ்நாட்டிற்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று தெரிவித்தார்.
அதேபோல் கேப்பிட்டா லேண்ட் (CapitaLand) நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் சஞ்சீவ் தாஸ்குப்தாவையும் முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து பேசினார்.

இச்சந்திப்பின்போது, உலகின் மிகச்சிறந்த தொழில் நுட்பங்களை ஒருங்கிணைத்து சிங்கப்பூரில் கேப்பிட்டா லேண்ட் நிறுவனம் வடிவமைத்துள்ள 'சிங்கப்பூர் சயின்ஸ் பார்க்' போன்ற கட்டமைப்புகளை உருவாக்குவதில் தமிழ்நாடு அரசு ஆர்வமாக உள்ளதால் அவற்றில் கேப்பிட்டா லேண்ட் நிறுவனத்தின் தொழில்நுட்ப பங்களிப்பையும் முதலீடுகளையும் அளித்திட வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications