இதுதான் சிங்கப்பூர்! "கோடீஸ்வரர்கள் கூட மெட்ரோ தான்!" பார்த்து வியந்த இந்தியர்! ஆச்சரியமான 4 மேட்டர்
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர் ஒருவர் இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் முக்கியமான வேறுபாடுகளைப் பட்டியலிட்டுள்ளார். இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் சென்றபோது இந்த நான்கு விஷயங்களும் தனக்கு மிகப் பெரிய ஆச்சரியத்தைக் கொடுத்ததாகவும் சிங்கப்பூர் வந்த பிறகு யோசிக்கும் லாஜிக்கையே மாற்ற வேண்டி இருந்ததாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.
இந்தியர்கள் பலரும் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார்கள். சிங்கப்பூரில் ஐடி தொடங்கி பல்வேறு வேலைகளில் இந்தியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அப்படிச் சிங்கப்பூரில் வேலை செய்து வரும் மூத்த மென்பொருள் பொறியாளர் ஒருவர் அங்குள்ள 4 தனித்துவமான விஷயங்கள் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சிங்கப்பூர் வாழ் இந்தியர்
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு முதலில் வந்த போது இந்த 4 விஷயங்களும் தனக்கு அதிர்ச்சி தரும் வகையில் இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், இது செட் ஆகவே சில காலமானதாக அவர் பதிவிட்டுள்ளார். சிங்கப்பூரில் வேலை செய்யும் சீனியர் ஐடி ஊழியரான அமன் என்பவர் தான் இந்த போஸ்ட்டை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "இது வெறும் இட மாற்றம் மட்டும் இல்லை. இங்கு வசிக்கும் போது லாஜிக்கே மொத்தமாக மாறுகிறது" என்று பதிவிட்டுள்ள அவர், சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் உள்ள 4 முக்கியமான விஷங்களையும் விளக்கியுள்ளார்.
கோடீஸ்வரர்களும் மெட்ரோ தான்
அதில் முக்கியமானது செல்வ முரண்பாடு.. இந்தியாவில் பெரும்பாலும் பணக்காரர்கள் கார்களை வாங்குவார்கள். கார்களில் பயணிக்கவே விரும்புவார்கள். ஆனால், சிங்கப்பூர் உரிமச் சான்றிதழ் (COE) முறையின் காரணமாக காரின் விலை மிக அதிகமாக இருக்கும். சாதாரண காரின் விலையே கோடியைக் கூட எட்டுமாம். இதனால் அங்கு வசிக்கும் பெரும்பாலானோர் பொதுப் போக்குவரத்தையே பயன்படுத்துகிறார்களாம். பெரும் பணக்காரர்கள் கூட பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை அங்குப் பார்க்க முடியும் என்கிறார்.
அடுத்து உணவு.. இந்தியாவில் எப்போதும் உணவை வீட்டிலேயே சமைத்துச் சாப்பிடுவார்கள். வெளியே சென்று சாப்பிடுவது ஒரு ஆடம்பரமாகவே கருதப்படும். ஆனால், சிங்கப்பூரில் அதுதான் எதார்த்தத்திற்கு ஏற்றதாக இருக்கிறதாம். சிங்கப்பூரில் மளிகைப் பொருட்களின் விலை, சமைக்கச் செலவிடும் நேரம் ஆகியவற்றை எல்லாம் சேர்த்துக் கணக்கிட்டுப் பார்த்தால்.. உள்ளூர் ஹோட்டல்களில் கிடைக்கும் உணவுகளே விலை குறைவானதாக இருக்கிறதாம்.
டிஜிட்டல் சிஸ்டம்
அடுத்து மிக முக்கியமானது சிங்கப்பூரின் டிஜிட்டல் சிஸ்டம்.. அதிலும் குறிப்பாக அவர் "சிங்க் பாஸ்" (Singpass) செயலியை வியந்து பாராட்டுகிறார். வங்கி, ஹெல்த்கேர், வரி வரை ஒருங்கிணைந்த சேவைகளை அதிலேயே பெற முடிகிறதாம். சிங்கப்பூர் அரசு கிட்டத்தட்ட ஒரு டெக் நிறுவனம் போலச் செயல்படுவதால் எல்லாமே டிஜிட்டல் மயமாகிவிட்டதாம். இதனால் ஜெராக்ஸ் உள்ளிட்ட பேப்பர் ஒர்க் தேவையில்லாமல் போய்விடுகிறது என்கிறார்.
அதேபோல சிங்கப்பூர் மக்கள் எப்போதும் தங்கள் வேலையை மட்டும் பார்ப்பார்களாம். தேவையில்லாமல் மற்றவர்கள் வேலையில் மூக்கை நுழைக்க மாட்டார்களாம். இந்தியாவில் சமூக கலாச்சாரத்துடன் ஒப்பிடும்போது இது தனக்கு ஆரம்பத்தில் தனிமையைக் கொடுத்தாலும் போகப் போக இதுவே சவுகரியமாகப் போனதாம். இந்த பிரைவசி வேறு எங்கும் கிடைக்காது என அவர் பதிவிட்டுள்ளார்.
நெட்டிசன்கள்
அவரது இந்த போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அவரது இந்தக் கருத்துகளைப் பலரும் ஆமோதித்தே கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். நெட்டிசன் ஒருவர், "இத்தோடு இன்னொரு விஷயத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். வேலை செய்யும் இடங்களில் பெண்மை பலவீனமாகப் பார்க்க மாட்டார்கள். இது எனக்குப் பிடித்திருந்தது. சிங்கப்பூரில் நான் சந்தித்த பல மூத்த நிர்வாகிகள் பெண்கள். இந்தியாவில் பெண்கள் ஆளுமையைப் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால், இங்கு நிலைமை வேறு" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications