சிங்கப்பூரில் திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்- 2 வாரங்களில் அதி உச்சமாகுமாம்- மாஸ்க் கட்டாயம்!
சிங்கப்பூர்: உலக நாடுகளை முடக்கிப் போட்ட மனித உயிர்களை கொத்து கொத்தாக காவு வாங்கிய கொரோனா பெருந்தொற்று பேரலை சிங்கப்பூரை மீண்டும் தாக்கி வருகிறது. அடுத்த 2 அல்லது 4 வாரங்களில் சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதி உச்சமாகும் என அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
2019-ம் ஆண்டின் இறுதியில் தொடங்கியது கொரோனே வைரஸ் பாதிப்பு. அன்று முதல் உலக நாடுகளை பெரும் அச்சுறுத்தி வருகிறது கொரோனா பாதிப்பு. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நோயால் 70,10,681 பேர் உயிரிழந்துள்ளனர். 70,47,53,890 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன. கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவில் பெரும் எண்ணிக்கையில் போடப்பட்டன. உலக நாடுகளுக்கும் இந்தியாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் கொரோனா தடுப்பூசிகளால் பக்கவிளைவுகள் ஏற்படுவது உறுதியான அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அத்துடன் கொரோனா தடுப்பூசிகள் சந்தைகளில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டும் இருக்கின்றன.
இந்த நிலையில் திடீரென சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. சிங்கப்பூரில் மே 5-ந் தேதி முதல் மே 11-ந் தேதி வரை மொத்தம் 26,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தற்போதைய நிலையில் சிங்கப்பூரில் நாள்தோறும் 200க்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.
இதனிடையே சிங்கப்பூரில் அடுத்த 2 முதல் 4 வாரங்களில் கொரோனா பரவல் எண்ணிக்கை உச்சத்தை எட்டும் என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் எச்சரிக்கை விடுத்துள்ளார். இருந்த போதும் தற்போதைய நிலையில் எந்த ஒரு கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை எனவும் ஓங் யீ காங் விளக்கம் அளித்துள்ளார். அதே நேரத்தில் பொதுமக்கள் மீண்டும் முக கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications