ஸ்டாலினிடம் உறுதி கொடுத்த சிங்கப்பூர் டமாசெக் நிறுவனம்! ஒரே நாளில் போன காரியம் பாதி வெற்றி!
சிங்கப்பூர்: தமிழ்நாட்டில் மீன்பிடி சார்ந்த தொழில்துறைகளிலும், உணவுப் பதப்படுத்தும் துறைகளிலும் டமாசெக் (Temasek) நிறுவனம் முதலீடு செய்வதற்கு ஆர்வமாக உள்ளதாக அதன் தலைமை செயல் அலுவலர் முதலமைச்சர் ஸ்டாலினிடம் உறுதியளித்துள்ளார்.
இதனிடையே தமிழ்நாட்டில் Fintech city என்ற நிதி நிறுவனங்களுக்கான கட்டமைப்புகளில் டமாசெக் நிறுவனம் முதலீடு செய்திட வேண்டும் என்றும் புதிய கடல் சார்ந்த காற்றாலைகளை நிறுவ முன்வர வேண்டும் எனவும் முதல்வர் கேட்டுக் கொண்டார்.

சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுடன் தமிழ்நாட்டிற்கு உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-க்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்திலும், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதற்காக நேற்று சென்னையிலிருந்து முதலமைச்சர் ஸ்டாலின் சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார்.
இன்று முதலமைச்சர் ஸ்டாலின் Temasek, Sembcorp, CapitaLand ஆகிய நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களை சந்தித்துப் பேசினார். அப்போது தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு நிலவும் சாதகமான சூழ்நிலையை எடுத்துக்கூறி, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் செய்திட வேண்டுமென்று கோரிக்கை விடுத்து, சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தார்.
டமாசெக் (Temasek) நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் தில்ஹான் பிள்ளை சந்திரசேகராவை சந்தித்த முதலமைச்சர், இந்தியாவில் தென் பகுதியில் அமைந்திருக்கும் தமிழ்நாடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் தெற்காசிய நாடுகளிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் மாநிலமாக திகழ்கிறது என்று தெரிவித்தார்.
டமாசெக் நிறுவனம் தமிழ்நாட்டில் காற்றாலை உற்பத்தியில் ஏற்கனவே முதலீடு செய்துள்ளதற்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்ட முதலமைச்சர் , தமிழ்நாட்டில் ஏற்கனவே உள்ள காற்றாலைகளை வலுப்படுத்தவும், புதிய கடல் சார்ந்த காற்றாலைகளை நிறுவவும் டமாசெக் நிறுவனத்தை கேட்டுக் கொண்டார்.

தற்போது இளம் தொழில் முனைவோர்களை தமிழ்நாடு அரசு ஊக்குவித்து வருவதால் Startup நிறுவனங்கள் பல்வேறு புதிய தொழில்நுட்ப பிரிவுகளில் புதிய தொழில்களை தொடங்கி வருகிறது. இந்த Startup நிறுவனங்களில் டமாசெக் நிறுவனம் முதலீடு செய்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இந்தியாவின் மொத்த உணவு பதப்படுத்தல் துறையில் தமிழ்நாடு தற்போது 8 சதவீத பங்களிப்பை வழங்குகிறது என்றும், தமிழ்நாடு அரசு உணவு பதப்படுத்தும் தொழில் பூங்காக்களை நிறுவுவதில் கவனம் செலுத்தி வருவதால், அவற்றில் டமாசெக் நிறுவனத்தின் முதலீடு தமிழ்நாட்டின் வேளாண் வளர்ச்சிக்கும், சிங்கப்பூரின் எதிர்கால உணவு பாதுகாப்பிற்கும் பெரும் உதவியாக இருக்கும் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாட்டில் Fintech city என்ற நிதி நிறுவனங்களுக்கான தனியான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றும், அவற்றிலும் டமாசெக் நிறுவனம் முதலீடு செய்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அதற்கு டமாசெக் நிறுவன தலைமை செயல் அலுவலர், தமிழ்நாட்டில் மீன்பிடி சார்ந்த தொழில் துறைகளிலும், உணவுப் பதப்படுத்தும் துறைகளிலும் தங்கள் நிறுவனம் முதலீடு செய்வதற்கு ஆர்வமாக உள்ளதாக முதலமைச்சரிடம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications