சிங்கப்பூர் அதிபராகும் தர்மன் சண்முகரத்தினத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சிங்கப்பூர்: சிங்கப்பூர் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்தினத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.
சிங்கப்பூரின் அதிபர் ஹலிமாவின் 6 ஆண்டு பதவிக் காலம் வரும் செப்டம்பர் 13-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி புதிய அதிபரை தேர்வு செய்வதற்காக சிங்கப்பூரில் அண்மையில் தேர்தல் நடந்தது . இதில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த 66 வயதாகும் தர்மன் சண்முகரத்னம் , சிங்கப்பூர் அரசாங்க முதலீட்டு நிறுவனத்தின் (GIC) முன்னாள் தலைமை முதலீட்டு அதிகாரி இங் கொக் சொங் (76), NTUC இன்கம் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டான் கின் லியான் (75) ஆகியோர் போட்டியிட்டனர்.

இதில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் 70 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட இங் கொக் சொங் 16 சதவீத வாக்குகளும், டான் கின் லியான் 14 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளனர். இதன்மூலம் சிங்கப்பூரின் அடுத்த அதிபராக தர்மன் சண்முகரத்னம் அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். விரைவில் அதிபராக பொறுப்பேற்க உள்ளார்.
இந்நிலையில் தர்மன் சண்முகரத்தினத்தின் பின்னணி குறித்து பலரும் கூகுளில் தேடி வருகிறார்கள். அவரது சொத்து மதிப்பு எவ்வளவு என்பதை இப்போது பார்ப்போம்.
தர்மன் சண்முகரத்தினத்தின் நிகர சொத்து மதிப்பு தோராயமாக 67 மில்லியன் டாலர் ஆக இருக்கும் என்று சிங்கப்பூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்திய மதிப்பில் 554 கோடி ரூபாய் சொத்து வைத்திருப்பார் என்று மதிப்பிடுகின்றன அந்த நாட்டு ஊடகங்கள்.
பொருளாதார ஆலோசகரான தர்மன் சண்முகரம் வெற்றிகரமாக பல்வேறு நிதி முதலீடுகளை செய்து, தனது வருமானத்தை இந்த அளவிற்கு உயந்துள்ளார் என்று கூறுகிறார்கள்.
சிங்கப்பூரில் பொருளாதார நிபுணர், அமைச்சர், பிரதமரின் ஆலோசகர், துணை பிரதமர் பல பொறுப்புகளில் இருந்தவர் தர்மன் சண்முகரத்தினம். அதன்படி சிங்கப்பூர் அரசு அவருக்கு வழங்கிய ஊதியத்தை தாண்டி, வந்த பணத்தை பல்வேறு விஷயங்களில் முதலீடுகள் செய்ததால் அவரது சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.
மற்றவர்கள் சொத்து சேர்த்ததற்கும் இவர் சொத்து சேர்த்ததற்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. மற்றவர்கள் தங்கள் சொந்த நலனை முன்னிறுத்தி சொத்து சேர்த்திருப்பார்கள். ஆனால் தர்மன் சிங்கப்பூரின் பொருளாதார நிலையை மேம்படுத்தியதில் முக்கிய பங்கு உள்ளது. எனவே அந்த வகையில் சிங்கப்பூர் அரசுக்கே பொருளாதார ஆலோசனை கொடுத்தவருக்கு தனது சொத்து மதிப்பை எப்படி உயர்த்த வேண்டும் என்று சொல்லியா தர வேண்டும்.
லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்து முடித்தவர் சிங்கப்பூரின் நாணய ஆணையத்தில் பொருளாதார நிபுணராக வாழ்க்கையை தொடங்கினார். அங்கு அவரது வேலை முறை மற்றும் அர்ப்பணிப்பு சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் கல்வி அமைச்சர் உட்பட பல முக்கிய பதவிகளை பெற வழிவகுத்தது.
2007 ஆம் ஆண்டில் அவர் சிங்கப்பூரின் மூத்த அமைச்சராகவும், 2011 ஆம் ஆண்டில் துணைப் பிரதமராகவும் பொறுப்பேற்றார். இதன் மூலம் சிங்கப்பூரில் உயந்த பதவிக்கு வந்த முதல் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நபராக தர்மன் சண்முகரத்தினம் அறியப்பட்டார்.
1970 களில் இங்கிலாந்தில் தனது மாணவர் பருவத்திலேயே தர்மன் சண்முகரத்தினம் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார் . ஆரம்பத்தில் சோசலிச நம்பிக்கைகளில் தீவிரமாக இருந்தார். 2015 ஆம் ஆண்டு முதல் சமூகக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராக அவர் பொறுப்பேற்ற போது, பொருளாதார வளர்ச்சியுடன் சமூக நலனை இணைக்க வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டார். பொருளாதார சமநிலையை ஏற்படுத்தினார். அவர் நினைத்த படியே தற்போது வலுவான சமூக பாதுகாப்புடன் சிங்கப்பூர் பொருளாதாரம் இருக்கிறது.












Click it and Unblock the Notifications