பாஜக மேடையில் கிழிந்த சட்டை.. கீழே விழுந்த முன்னாள் எம்எல்ஏ! அண்ணாமலையுடன் செல்பி எடுக்க தள்ளுமுள்ளு
சிவகங்கை: மத்திய பாஜக அரசின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அண்ணாமலையுடன் கட்சித் தொண்டர்கள் செல்பி எடுக்க குவிந்ததால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவின்போது முன்னாள் எம்.எல்.ஏ. மேடையிலிருந்து கீழே விழுந்தார்.
Recommended Video
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஆட்சி அமைத்து 8 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளன. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் பாஜக சாதனை விளக்க கூட்டங்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு பாஜகவும் சாதனைகளை விளக்க பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து உள்ளது.

நேற்று சிவகங்கை அரண்மனை வாசலில் 8 ஆண்டுகால மத்திய பாஜக அரசின் சாதனை விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, காரைக்குடி முன்னாள் எம்.எல்.ஏ. சோழன் பழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் அண்ணாமலையுடன் செல்பி எடுப்பதற்காகவும், அவருக்கு பொன்னாடை போர்த்துவதற்காகவும் பாஜகவினர் வரிசையாக மேடையேறாமல் மொத்தமாக மேடையில் குவிந்தனர். இதனால் மேடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு கட்சித் தொண்டரின் சட்டை கிழிந்தது. விழா ஏற்பாட்டாளர்கள் செய்வதறியாமல் திணறினர்.
பாஜகவினர் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டபோது ஒருவர் மேடையில் அமர்ந்திருந்த முன்னாள் எம்.எல்.ஏ. சோழன் பழனிசாமி மோதியுள்ளனர். இதனால் நிலை தடுமாறிய சோழன் பழனிசாமி மேடையிலிருந்து தவறி கீழே விழுந்தார். உடனடியாக அங்கு சென்ற பாஜகவினர் சோழன் பழனிசாமியை தூக்கிவிட்டனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கு முன்னதாக அதிமுகவில் அங்கம் வகித்த சோழன் பழனிசாமி, காரைக்குடி சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications