ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு என்கவுண்டர் மீது சந்தேகமாக இருக்கு.. உண்மை மறைக்கப்படுது- கார்த்தி சிதம்பரம்
சிவகங்கை: அரசியல்வாதிகள் கொலை செய்வதில்லை.. அரசியலுக்குள் அதிகமான ரவுடிகள் வந்து விட்டனர் அவர்களே கொலை சம்பவத்தில் ஈடுபடுகிறார்கள் என்றும், போலீஸ் என்கவுண்டர்களால் உண்மைகள் மறைக்கப்படுவதாக காங்கிரஸ் எம்பியும், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
சிவகங்கை அழகுமெய்ஞானபுரத்தில் உள்ள வலம்புரி செல்வ விநாயகர் கோவில் வளாகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.8 லட்சம் மதிப்பில் நாடக மேடை புதிதாக அமைக்கப்பட்டது. அதனை பொது மக்கள் பயன்பாட்டிற்கு காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் இன்று திறந்து வைத்தார்.

முன்னதாக அந்த கோவிலில் சாமி தரிசனம் செய்ததுடன் தனக்கு வாக்களித்தமைக்கு அப்பகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த நீட் தேர்வு முடிவுகளை வைத்து இந்த ஆண்டு மாணவ சேர்க்கை என்பது நடத்த கூடாது. மீண்டும் தேர்வு நடத்த வேண்டும். அல்லது 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும்
ரவுடிகள் நிறைய பேர் அரசியலுக்குள் வந்துவிட்டார்கள். தமிழகத்தில் நடைபெறும் கொலைகள் அரசியல் பின்னனியில் நடக்கும் கொலைகள் அல்ல. ஆனால் அரசியலுக்குள் ரவுடிகள் வந்ததால் அரசியல் கொலையாக அனைத்தும் பார்க்கப்படுகிறது. காவல்துறை தற்சமயம் எடுக்கும் நடவடிக்கைகளை ஏன் முன்பே எடுக்கவில்லை?. காவல்துறையினரின் என்கவுண்டர் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. நீதிமன்றம் தான் தண்டனை வழங்க வேண்டும்.
இந்த என்கவுண்டர் சம்பவத்தால் பல உண்மைகள் மறைக்கப்படுவதற்காகவே நடத்தப்படுவதாக சந்தேகம் உள்ளது. கூலிப்படைகளை தடுக்க வேண்டியது காவல்துறையினரின் கடமை. அதனை அவர்கள் செய்ய வேண்டும். அதிகாரிகளை மாற்றுவது என்பது அரசாங்கத்தின் விருப்பம். ஆனால் ஆக்கப்பூர்வமாக செயல்படக்கூடிய அதிகாரிகள் வரவேண்டும். கட்சியினில் சேருபவர்கள் குறித்து விசாரனை செய்து பின்னரே கட்சி தலைமை ஒருவரை சேர்க்க வேண்டும்.
திமுக மட்டுமல்ல எந்த ஆட்சியில் என்கவுண்டர் செய்யப்பட்டாலும் தவறே. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டவர் தப்பித்து செல்ல முற்பட்டார் என்பது அவரை என்கவுண்டர் செய்தோம் என்பதையும் சென்னையில் நடைபெற்றது என்கவுண்டர் என்பதை நம்ப முடியவில்லை. என்னை விமர்சனம் செய்வதை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்.
காவிரியில் தண்ணீர் வருவது குறித்து கவலைப்பட தேவையில்லை. அதனை பெற சில வழிமுறைகள் உள்ளது ஆனால் இந்த ஆண்டு கர்நாடகாவில் நல்ல மழை பெய்திருப்பதால் அவர்களே காவிரியில் தண்ணீரை திறந்து விடுவார்கள். மோடி அமைச்சரவையில் எந்த மாற்றமும் இல்லாததால் இந்த பட்ஜெட்டில் எந்த மாற்றமும் இருக்காது. மின் கட்டன உயர்வு என்பது தேவையற்றது. மக்கள் மீது இந்த பாரத்தை சுமத்தியிருக்க கூடாது.
மின்சார வாரியத்தில் ஆக்கப்பூர்வமான மாற்றங்களை கொண்டுவர எந்த அரசியல் கட்சியும் தயாராக இல்லை. மின்சார வாரியத்தில் மாற்றங்களை கொண்டுவந்தால் மட்டுமே மின் கட்டன உயர்வு தடுக்கப்படும். கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக கூனிக் குறுகி நிற்க வேண்டும் எனற அர்த்தம் இல்லை. தமிழகத்தில் பல பிரச்சினைகள் இருக்கும் போது அதனை நாம் சொல்ல வேண்டியது கடமை. அதனை சொன்னால் யாரும் நம்மை கேள்வி கேட்கப் போவது இல்லை. 2026ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்க வேண்டும்.. அதனை நோக்கிய நமது பயணம் இருக்க வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications