விவசாயி வீட்டில் நகை அபேஸ்! கொள்ளையடித்த ஊருக்கு மீண்டும் வந்த தம்பதிக்கு காத்திருந்த ட்விஸ்ட்
சிவகங்கை: சிவகங்கையில் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக விவசாயி வீட்டில் புகுந்து 120 கிராம் தங்க நகை திருடிய தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர். நகையை உருக்கி விற்று அதில் சொகுசு கார் ஒன்றையும், மோட்டார் சைக்கிளையும் வாங்கி சொகுசாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் மீண்டும் அதே பகுதியில் கொள்ளையடிக்க செல்வதற்காக சென்ற நிலையில் போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.
தங்கம் விலை அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில், தங்க நகைகளை கொள்ளையடித்து அதை விற்றுவிட்டு, கார், பங்களா கட்டி சொகுசு வாழ்க்கை வாழ ஒரு கும்பல் சுற்றிக்கொண்டு உள்ளது. ஒரே ஒருமுறை திருடினால் கூட போதும், அந்த பணத்தை வைத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவிடலாம் என்று நினைத்து திருட்டு கும்பலினர் சுற்றி வருகிறார்கள். எனினும் போலீசார் அவர்களை பிடித்து கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

முன்னுக்கு பின் முரணாக
அப்படித்தான் சிவகங்கையில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து விவசாயி வீட்டில் 120 கிராம் நகையை திருடி சொகுசு வாழ்க்கை வாந்துள்ளனர். கார், மோட்டார் சைக்கிள் வாங்கி சொகுசாக சுற்றியுள்ளனர். மீண்டும் அதே பகுதியில் திருட சென்ற போது போலீசாரிடம் சிக்கி கொண்டனர். நேற்று சிவகங்கை மதுரை மாவட்ட எல்லையான கண்ணமங்கலம்படி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாரை கண்டதும் கணவன் - மனைவி தப்பி ஓட முயன்றனர்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை வழிமறித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனையடுத்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், அந்த தம்பதி கொள்ளை அடிக்க செல்வதாக கூறியிருக்கிறார்கள். மேலும் விவசாயி ஒருவர் வீட்டில் 120 கிராம் நகை கொள்ளையடித்ததாவும் கூறியிருக்கிறார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அந்த தம்பதியை கைது செய்து சிங்கம்புணரி காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
120 கிராம் தங்க நகை
தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்ட தம்பதி மதுரை கரிமேடு பகுதியை சேர்ந்த ராமு (வயது 31) மற்றும் அவரது மனைவி லதா என்பது தெரியவந்தது. மேலும் கடந்த மாதம் 27 ஆம் தேதி எதேச்சையாக பைக்கில் சென்ற போது, அங்குள்ள ஒருவர் வீட்டை பூட்டிவிட்டு சாவியை மின் மீட்டர் மேல் வைத்ததை பார்த்து இருக்கிறார்கள். இதனையடுத்து அந்த வீட்டில் கொள்ளையடிக்க முடிவு செய்துள்ளனர்.
சிவகங்கை ஓசாரிப்பட்டியில் வசித்து வரும் குணசேகரன் என்பவர் வீட்டில் தான் கொள்ளையடிக்க திட்டமிட்டனர். விவசாயியான அவர் வீட்டை பூட்டிவிட்டு மனைவியை அழைத்துக்கொண்டு ஊருக்கு சென்றிருக்கிறார். இதன் பின்னர் அந்த சாவியை எடுத்த ராமு மற்றும் லதா வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த 120 கிராம் தங்க நகை, ரூ.40 ஆயிரம் பணம், வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்.
சொகுசு கார், மோட்டார் சைக்கிள்
இது தொடர்பாக குணசேகரன் போலீசில் புகார் அளித்த நிலையில் அது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் தான் ராமு, லதா தம்பதி இந்த கொள்ளையில் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. மேலும் அந்த நகையை உருக்கி விற்று அந்த பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்தது. சொகுசு கார், மோட்டார் சைக்கிள் வாங்கியதாகவும் கூறியுள்ளனர்.
இன்றும் அப்பகுதியில் கொள்ளையடிக்க சென்ற போது தான் மாட்டிகொண்டதாக அந்த தம்பதியினர் கூறியுள்ளனர். இதையடுத்து அவரது வீட்டுக்கு சென்று போலீசார் சோதனை செய்தனர். இதில் 80 கிராம் தங்கக் கட்டி வீட்டில் இருந்துள்ளது. மேலும் சொகுசு கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவையும் இருந்தன. இதையடுத்து அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications