ஜெயிச்சாலும் தோற்றாலும் ஆம்புலன்ஸ் உறுதி! சுயேச்சை வேட்பாளரின் தாராளம்! பெருகும் ஆதரவு!
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஜெயிச்சாலும் சரி, தோற்றாலும் சரி ஆம்புலன்ஸ் உறுதி எனக் கூறி ஓட்டுக் கேட்டு வருகிறார் சுயேச்சை வேட்பாளர் ராஜேஸ்வரி.
சுயேச்சை வேட்பாளரின் அதிரடி வாக்குறுதியால் அவரை எதிர்த்து போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
இதனிடையே ரூ.8 லட்சம் மதிப்பில் சொந்த நிதியை கொண்டு புதிதாக ஆம்புலன்ஸ் வாங்கிய சுயேச்சை வேட்பாளர் ராஜேஸ்வரி அதனை இப்போதே 18-வது வார்டில் கொண்டு சென்று நிறுத்திவிட்டார்.

நகர்ப்புற உள்ளாட்சி
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் 9 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பிரச்சாரக் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு சற்றும் சளைக்காத வகையில் சுயேச்சை வேட்பாளர்களும் அதிரடி வாக்குறுதிகளை அள்ளி வீசி வாக்காளர்களை வளைத்து வருகின்றனர். அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி 18-வது வார்டில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ராஜேஷ்வரி, தனது வாக்குறுதியால் தமிழகம் தழுவிய அளவில் கவனம் ஈர்த்திருக்கிறார்.

ஆம்புலன்ஸ் சாவி
தன்னை கவுன்சிலராக வெற்றி பெற வைத்தாலும் சரி, தோற்கடிக்க வைத்தாலும் சரி 18-வது வார்டு மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக ஆம்புலன்ஸ் ஒன்றை சொந்தப்பணத்தில் வாங்கிக் கொடுத்து அசத்தியிருக்கிறார் ராஜேஷ்வரி. இதன் மதிப்பு ரூ.8 லட்சம் எனத் தெரிவிக்கப்படுகிறது. 18-வது வார்டு மக்கள் பொதுநலச் சங்கத்திடம் ஆம்புலன்ஸ் சாவியை ஒப்படைத்த ராஜேஷ்வரி, தனக்கு ஓட்டுப்போடுவதும் ஓட்டுப்போடாததும் இனி மக்களின் விருப்பம் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம்.

பெருகும் ஆதரவு
அரசியல் கட்சி வேட்பாளர்களின் வண்ண வண்ண வாக்குறுதிகளை விட சுயேச்சை வேட்பாளரின் ஒற்றை செயல்பாட்டால் அவருக்கான ஆதரவு 18-வது வார்டில் பெருகி வருகிறது. இதனைக் கண்டு திமுக, அதிமுக வேட்பாளர்கள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் இது போல் சொந்தப்பணத்தில் ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுப்பது இதுவே முதல்முறையாகும். அதேபோல் ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்ததால் தனக்கு தான் ஓட்டுப் போட வேண்டும் என்ற கட்டாயமும் அவர் செய்யவில்லை.

மக்களின் தேவை
மக்களை பொறுத்தவரை தங்களுக்கு என்ன தேவையோ, அதை யார் நிறைவேற்ற முன் வருகிறார்களோ அவர்களையே ஆதரிக்க முன் வருகிறார்கள். அதைவிடுத்து நாங்கள் அதைச் செய்தோம், இதைச் செய்தோம், இன்னும் பல செய்வோம் என பழையகால பரப்புரைகளை மக்கள் ரசிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications