சிவகங்கையை டார்கெட் செய்த அர்ஜுன மூர்த்தி.. டென்ஷனில் எச்.ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள்.. பாஜகவில் பரபர!
சிவகங்கை: சிவகங்கை எம்.பி தொகுதி, விஐபி அந்தஸ்து கொண்டது. முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பல முறை வென்ற தொகுதி. இம்முறை சிட்டிங் எம்.பி கார்த்தி சிதம்பரம் சீட் பெற முயன்று வருகிறார். திமுக போட்டியிடவும் வாய்ப்புள்ளது. இந்நிலையில், பாஜகவில் அர்ஜூன மூர்த்தி, சிவகங்கையை டார்கெட் செய்வதாக தகவல்கள் பரபரக்கின்றன.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்தபோது பாஜகவின் அறிவுசார் பிரிவு தலைவராக இருந்த அர்ஜுன மூர்த்தி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ரஜினியுடன் இணைந்தார். ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்னதாக, அர்ஜுன மூர்த்தியை தனது மக்கள் மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமித்தார். அவருடன் பல்வேறு கட்டமாக ஆலோசனைகளையும் நடத்தினார் ரஜினிகாந்த்.

ஆனால், உடல் நலன் உள்ளிட்ட காரணங்களால் ரஜினிகாந்த், அரசியல் கட்சி தொடங்கும் முடிவைக் கைவிட்டதால் அர்ஜுன மூர்த்தி, ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து விலகினார். ஆனாலும், ரஜினிகாந்த்தின் வழியைப் பின்பற்றுவேன் என்று பேட்டி அளித்த அர்ஜுன மூர்த்தி, இந்திய மக்கள் முன்னேற்றக் கழகம் என்கிற கட்சியை தொடங்கினார்.
ரஜினிகாந்த்தின் ஆசையை நாம் நிறைவேற்றுவோம், ரஜினி ரசிகர்கள் என் கட்சியில் இணைந்து கொள்ளலாம் என அறிவித்த அர்ஜுன மூர்த்தி, சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் இமமுக போட்டியிட இருப்பதாகவும் அறிவித்தார். எனினும், தனது கட்சிக்கு போதிய ஆதரவு கிடைக்காத நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு, தனது கட்சியைக் கலைத்துவிட்டு மீண்டும் பாஜகவில் ஐக்கியம் ஆனார்.

பின்னர், அர்ஜுன மூர்த்திக்கு பாஜகவில் சமூக ஊடகப் பிரிவு மாநில பார்வையாளர் பதவி வழங்கப்பட்டது. இதையடுத்து சிவகங்கை மக்களவை தொகுதி பொறுப்பாளராக அர்ஜுனமூர்த்தி நியமிக்கப்பட்டார். இந்நிலையில் சிவகங்கை தொகுதியில் சீட் பெற அர்ஜுன மூர்த்தி காய் நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காகவே அவர் தொகுதி பொறுப்பாளர் பதவியை கேட்டு பெற்றதாக கூறப்படுகிறது.
அர்ஜுன மூர்த்தி புதுக்கோட்டை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர். புதுக்கோட்டை, காரைக்குடி பகுதியில் உள்ள முக்கியமான சமூகம் ஒன்றைச் சேர்ந்தவர். இவரது அப்பா ராமசாமி தொழிலதிபர். ஜனதா ரோட்வேஸ் என்ற லாரி நிறுவனத்தை நடத்தி வந்தார். அர்ஜுனமூர்த்திக்கு சொந்தமாக வேறு சில நிறுவனங்களும் உள்ளன.

பாஜக தொகுதி பொறுப்பாளராக, சிவகங்கை தொகுதி முழுவதும் இண்டு இடுக்கெல்லாம் பயணித்து, கட்சியினரிடம் ஆலோசனை நடத்தியுள்ள அர்ஜுன மூர்த்தி, சாதகமான நிலை இருப்பதாக உணர்ந்து, தானே களமிறங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிவகங்கை தொகுதியில் பாஜகவுக்கு கள நிலவரம் எப்படி உள்ளது என்பது குறித்து தனியாக சர்வே ஒன்றையும் நடத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.
சிவகங்கை தொகுதியைப் பொறுத்தவரை மூத்த பாஜக தலைவர் எச்.ராஜா, சிவகங்கை மாவட்ட பாஜக தலைவர் மேப்பல் சக்தி உள்ளிட்டோர், சீட் பெற விரும்புவதாகத் தெரிகிறது. அதேசமயம், பாஜக கூட்டணியில் இணைய விரும்பும் அமமுகவின் முக்கியமான குறிகளில் ஒன்றாகவும் சிவகங்கை தொகுதி உள்ளது.

அமமுக, சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளில் ஏற்கனவே நல்ல வாக்கு வங்கியைக் கொண்டுள்ளது. உள்ளாட்சி மன்றங்களிலும் அமமுகவினர் பதவிகளில் உள்ளனர். இதனால், வரும் லோக்சபா தேர்தலில் சிவகங்கை தொகுதியை எதிர்பார்க்கிறார் டிடிவி தினகரன். அவரே போட்டியிடும் திட்டத்தில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தான் பாஜகவின் அர்ஜுன மூர்த்தி சிவகங்கை சீட்டை டார்கெட் செய்துள்ளாராம். சிவகங்கையில் பாஜக தனக்கு சீட் கொடுத்தால் நிற்பேன் என்றும் கூறியுள்ளாராம் அர்ஜுன மூர்த்தி. அர்ஜுன மூர்த்தியின் முடிவு, ஏற்கனவே சீட் பெற காய்நகர்த்தி வரும் பாஜக தலைகளையும், அமமுகவினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
காங்கிரஸ் கட்சியில் சிட்டிங் எம்.பி கார்த்தி சிதம்பரத்திற்கு மீண்டும் சீட் கொடுக்கக் கூடாது என அவருக்கு எதிராக சொந்தக் கட்சியினரும், கூட்டணிக் கட்சியான திமுகவினரும் போர்க்கொடி தூக்கி வரும் நிலையில், எதிர் தரப்பில் பாஜக அர்ஜூன மூர்த்தியின் மூவ்கள் சிவகங்கை அரசியலில் பரபரப்பைக் கிளப்பி வருகின்றன.












Click it and Unblock the Notifications