சாமி சத்தியமா ராமசாமி பேனரைக் கிழிக்கலை.. சூடத்தை அணைத்து சத்தியம் செய்த மக்கள்
காரைக்குடி: தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவர் கே.ஆர். ராமசாமியின் பேனர் கிழிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாங்கள் பேனரைக் கிழிக்கவில்லை என்று கூறி கோவிலில் சூடத்தை அணைத்து சத்தியம் செய்த நிகழ்ச்சியால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம் காளகாளையார்கோவில் அருகே உள்ள விளாங்குடியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சந்தனமாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது.

அதில் சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ராமசாமி கலந்துகொண்டார். விளாங்குடி ஊர் பெரியவர்கள் அழைத்ததன் பேரில் ராமசாமி எம்.எல்.ஏ.அங்கு வருகை தந்தார்.
இந்நிலையில் ராமசாமி திருவிழாவில் பங்கேற்பது பிடிக்காத சிலர், கே.ஆர்.ராமசாமியை வரவேற்று வைக்கப்பட்ட பதாகைகளை கிழித்தனர். இதனால் தர்மசங்கடத்துக்கு ஆளான விளாங்குடி ஊர் முக்கியஸ்தர்கள், எப்படியோ ஒரு வழியாக ராமசாமியை வரவேற்று நல்ல முறையில் அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து இது தொடர்பாக ஊருக்குள் விசாரணை நடத்தப்பட்டதில் நான் இல்லை; நீ இல்லை என பதில் வந்துள்ளது. ஆனால் இதை அப்படியே விடுவதாக இல்லை விளாங்குடி ஊர் பெரியவர்கள்.
ஊரைக் கூட்டி, கொல்லங்குடி காளியம்மன் கோவிலுக்கு கிராமமக்களை வரவழைத்து பேனரை கிழிக்கவில்லை என சூடத்தில் சத்தியம் செய்ய வைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பலரும் வந்து நான் கிழிக்கலை நான் கிழிக்கலை என்று சூடத்தை கப் கப்பென்று அணைத்துச் சென்றனர்.
ஆமா, இது காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராமசாமிக்கு தெரியுமா...!!!













Click it and Unblock the Notifications