மாண்டஸ் புயல்:3வது மாடியில் இருந்து விழுந்த கண்ணாடி.. கழுத்தை அறுத்ததில் சிலிண்டர் ஊழியர் பலி-சோகம்
சிவகங்கை: மாண்டஸ் புயல் காரணமாக வீசிய சூறைக்காற்றுக்கு 3வது மாடியில் இருந்து விழுந்த கண்ணாடி சிலிண்டர் டெலிவரி செய்தவரின் கழுத்தில் வெட்டியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வங்கக்கடலில் மாண்டஸ் புயல் உருவாகி உள்ளது. இந்த புயல் தீவிர புயலாக உருமாறிய நிலையில் இன்று மதியம் அது வலுவிழந்தது. தற்போது புயலாக இது உள்ளது.
இந்த புயல் இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை தமிழ்நாட்டின் மாமல்லபுரம் அருகே கரையை கடக்க உள்ளது. புயல் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதிவேகமாக வீசும் காற்று
இந்த புயல் காரணமாக தமிழ்நாட்டில் வடமாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இருப்பினும் தென்மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் மழை இல்லை. இருப்பினும் பகல் முழுவதும் வெயில் இன்றி குளிர்ச்சியான சூழல் நிலவியது. காற்றும் வழக்கத்தை விட வேகமாக வீசியது. சில இடங்களில் அதிவேகமாக காற்று வீசியது. இந்நிலையில் தான் வேகமாக வீசிய காற்றால் விழுந்த கண்ணாடி ஒருவரின் உயிரை பறித்துள்ள சோக சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:

சிலிண்டர் டெலிவரி ஊழியர்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா பிள்ளையார்பட்டி அருகே உள்ள சிறுகூடல் பட்டியை சேர்ந்தவர் கருப்பணன். இவரது மகன் பழனியப்பன் (வயது 44). இவர் காரைக்குடி பேயன்பட்டியில் உள்ள தனியார் ஏஜென்சியில் சிலிண்டர் டெலி செய்யும் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் வழக்கம்போல் இன்றும் சிலிண்டர் டெலிவரி செய்யும் பணியை மேற்கொண்டு வந்தார்.

3வது மாடியில் இருந்து விழுந்த கண்ணாடி
அதன்படி இன்று மதியம் சங்கராபுரம் ஊராட்சி தந்தை பெரியார் நகர் ஒன்பதாவது வீதி வழியாக பர்மா காலணிக்கு கேஸ் சிலிண்டர்கள் டெலிவரி செய்ய பைக்கில் சென்று கொண்டிருந்தார். அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை அவர் கடந்து செல்ல முயன்றார். அப்போது சூறைக்காற்று வீசியதால் அடுக்குமாடி குடியிருப்பின் 3வது மாடியில் பொருத்தப்பட்டு இருந்த கண்ணாடி உடைந்து கீழ்நோக்கி விழுந்தது.

கழுத்தை அறுத்த கண்ணாடி
இந்த கண்ணாடி துண்டுகள் எதிர்பாராத விதமாக பழனியப்பனின் கழுத்தை அறுத்தது. இதனால் ரத்தம் கொட்டிய நிலையில் அவர் உயிருக்கு போராடினார். இதையடுத்து அவர் மீட்கப்பட்டார். ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் வராததால் ஆட்டோவில் பழனியப்பன் ஏற்றப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மருத்துவமனையில் பலி
மருத்துவமனையில் பழனியப்பனை டாக்டர்கள் பரிசோதித்தனர். அடுத்த சிறிது நேரத்திலேயே பழனியப்பன் இறந்துபோனார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை துவக்கினர். உதவி எஸ்பி ஸ்டாலின் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு அடுக்குமாடி குடியிருப்பில் பொருத்தப்பட்ட கண்ணாடிகள் அகற்றப்பட்டது.

அலட்சியம் காரணமா?
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதேபோல், அவ்வழியாக சென்ற மாட்டின் மீது கண்ணாடி விழுந்து படுகாயம் அடைந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த கண்ணாடிகள் அகற்றப்படாததே இந்த உயிரிழப்புக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications