கணவரை இழந்து தனிமையில் வசித்த..தலைமை ஆசிரியை வெட்டி படுகொலை.. திடுக்கிட்ட திருப்பத்தூர்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில், பெண் தலைமை ஆசிரியர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கண்டு வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அமைந்துள்ளது தென்மாப்பட்டு கிராமம். இந்த கிராமத்தில் செயல்பட்டு வரும் உயர்நிலை பள்ளியில், ரஞ்சிதம் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இவரது கணவர் ஏற்கெனவே உயிரிந்து விட்டார். இந்த தம்பதிக்கு அம்பேத்கர் பாரதி என்ற மகனும், அபிமதி என்ற மகளும் உள்ளனர். மகன் அம்பேத்கர், கோயம்புத்தூரில் உள்ள மருத்துவ கல்லூரியில் படித்து வரும் நிலையில், திருமணமான மகள் அபிமதி பட்டுக்கோட்டையில் பணியாற்றி வருகிறார்.

பள்ளிக்கு வரவில்லை
இந்நிலையில், தலைமை ஆசிரியை ரஞ்சிதம் இன்று திடீரென பள்ளிக்கு வரவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து, சந்தேகம் அடைந்த சக ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் ரஞ்சிதத்தின் வீட்டுக்குச் சென்று பார்க்க முடிவு செய்தனர். இதனையடுத்து, ஆசிரியர்கள், தலைமை ஆசிரியை ரஞ்சிதம் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, அவர் பிணமாக கிடந்ததால் அதிர்ச்சியடைந்தனர்.

போலீஸ் விரைந்தனர்
இதனையடுத்து உடனடியாக சக ஆசிரியர்கள் திருப்பத்தூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். ஆசிரியர்கள் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

தீவிர விசாரணை
இதனைத் தொடர்ந்து மரணத்தில் சந்தேகம் அடைந்த போலீசார், உடனடியாக கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீடு முழுவதும் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட தலைமை ஆசிரியையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை பின்னணி
இந்த படுகொலை தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமை ஆசிரியை ரஞ்சிதம், நேற்று இரவு, வீட்டில் தனியாக இருந்ததை சிலர் நோட்டமிட்டு, பின்னர் அவரை படுகொலை செய்திருக்கலாம் என சந்கேகிக்கப்படுகிறது. அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? ஏதாவது முன்விதோதம் இருக்குமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு, கொலை செய்த குற்றவாளிகளை தேடி வருகின்றனர். வீட்டில் தனியாக இருந்த பெண் தலைமை ஆசிரியர் மர்ம நபர்களால் படுகொலை செய்த சம்பவம், தென்மாப்பட்டு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications