28 ஆண்டுகளில் 1 லட்சம் தீர்ப்பு.. எல்லாமே முருகன் சொன்னது - முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி
சிவகங்கை: 28 ஆண்டுகளில் 1 லட்சம் தீர்ப்பு சொல்லியிருக்கிறேன். ஒரு தீர்ப்பு கூட நான் சத்தியமாகச் சொன்னதில்லை. எல்லாமே முருகன் சொன்னது. நீதிபதி என்ற பதவியே அவர் எனக்கு போட்ட பிச்சை என்று உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சொக்கலிங்கம் பேசியுள்ளார்.
நான் 28 ஆண்டுகளாக நீதித்துறையில் நீதிபதியாக பணியாற்றி இருக்கிறேன். ஒரு லட்சம் தீர்ப்புகளை வழங்கியுள்ளேன். அதில் ஒன்று கூட நான் வழங்கியதல்ல எல்லாம் முருகன் வழங்கியது என்று முன்னாள் நீதிபதி பேசியுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.

காரைக்குடி, நெற்குப்பை கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சொக்கலிங்கம் பேசியதாவது: 28 ஆண்டுகள் நான் நீதிபதியாக இருந்திருக்கிறேன். அந்த உயர்நீதிமன்றத்தில் ஒரு லட்சம் தீர்ப்புகள் வழங்கி இருக்கிறேன். இந்த 1 லட்சம் தீர்ப்பில் ஒரு தீர்ப்புகூட நான் சத்தியமாகக் கூறவில்லை. எல்லாம் முருகன் கூறியதுதான். சொன்ன தீர்ப்பு எல்லாம் அவர் சொன்னது. நான் சொன்னது அல்ல.
உயர்நீதிமன்ற நீதிபதி என்ற பதவியே அவர் எனக்கு போட்ட பிச்சை. முருகா என்று கண்ணை மூடி நின்றால் இங்கு அவர் ஓடி வந்துவிடுவார். சத்தியம்தான் நிற்கும் நேர்மைதான் நிற்கும். முருகா முருகா என்றால் முருகன் வர மாட்டார். எங்கு உண்மை நேர்மை இருக்கிறதோ அங்குதான் வருவார்.
உள்ளம் சரியாக இருந்தால் முருகன் வா என்றால் வருவார். நாம் முருகனை கொண்டாடுகிற அளவுக்கு பிறர் கொண்டாடுகிறார்களா எனக்குத் தெரியவில்லை. 368 பேர் செஷன்ஸ் நீதிபதிக்கு 6 காலியிடத்துக்குப் போட்டியிட்டனர். 368 பேரில் முருகன் என்னை முதலாவதாக தமிழ்நாட்டிலேயே என்னை தேர்ந்தெடுத்தார்.
பக்திக்கு வயது இல்லை. எந்த வயதில் வேண்டுமானாலும் பக்தி வரும். பக்திக்குப் பலன் உண்டு. தெரிந்து செய்தாலும் உண்டு. தெரியாமல் செய்தாலும் பலன் உண்டு. அதேபோல் தர்மத்திற்கும் பலன் உண்டு என்று பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications