சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட காவலாளி மர்ம மரணம்.. உறவினர்கள் போராட்டம்
சிவகங்கை: சிவகங்கை அருகே கோவிலில் நகைகள் காணவில்லை என்ற புகாரின் பேரில் அங்கு வேலை பார்த்த அஜித் என்ற காவலாளியை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று இருந்தனர். 3 நாட்கள் ஆன நிலையில் நேற்று உடல்நலம் பாதிப்படைந்து அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த அஜித்தின் உறவினர்கள் சாலை மறியல் செய்துள்ளனர். இது தொடர்பாக 6 போலீசார் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் அருகே பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் வெள்ளிக்கிழமை பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்தக்கோவிலில் தற்காலிக பணியாளராக அஜித் என்பவர் பணியாற்றி வந்தார். 28 வயதான அஜித் கோயிலில் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.

நகை காணவில்லை
இந்த நிலையில்தான் கடந்த வெள்ளிக்கிழமை மதுரையில் இருந்து நிக்தா என்பவரும் அவருடைய தாயார் சிவகாமியும் மடப்புரம் கோயிலுக்கு வந்துள்ளனர். கோயிலுக்கு வந்ததும், காரை ஒரு இடத்தில் நிறுத்திய நிக்தா, தனது காரை ஓரமாக பார்க் செய்யுங்கள் என்று கூறி அஜித்திடம் சாவியை கொடுத்ததாக சொல்லப்படுகிறது. தனக்கு கார் ஓட்ட தெரியாது என்றும் வேறு ஒருவரை காரை இயக்க சொல்லி ஓரமாக பார்க் செய்ய வைத்ததாக சொல்லப்படுகிறது.
இதற்கு மத்தியில் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு நிக்தா மற்றும் அவரது தாயார் வருகை தந்தனர். அப்போது கார் சாவியை வாங்கி பார்த்த போது காரில் இருந்த 9.5 சவரன் நகையை காணவில்லை என சொல்லப்படுகிறது. இது குறித்து அங்கு பணியில் இருந்த தற்காலிக ஊழியர் அஜித்குமாரிடம் நிக்தா கேட்டுள்ளார். அப்போது தனக்கு இதுபற்றி எதுவும் தெரியாது என்று அஜித்குமார் கூறியுள்ளார்.
உயிரிழந்த அஜித்
இதையடுத்து காரில் இருந்த நகையை காணவில்லை என்றும் நடந்த சம்பவத்தை கூறியும் நிக்தா போலீசில் புகார் அளித்து இருக்கிறார். இந்த புகாரின் அடிப்படையில் மானாமதுரை குற்றப்பிரிவு தனிப்படை போலீசார், காவலாளியாக பணியாற்றிய அஜித்குமாரை விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். அப்போது திடீரென அஜித்குமாருக்கு உடல் நலபாதிப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து, உடனடியாக சிவகங்கையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு போலீசார் அஜித்குமாரை அழைத்து சென்று இருக்கிறார்கள். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்கு அஜித்குமாரை போலீசார் அழைத்து சென்றுள்ளனர். அங்கு அஜித்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக கூறினர். இது குறித்த தகவல் கிடைத்தது, காவல் நிலையத்திற்கு வந்த அஜித்குமரின் பெற்றோர்கள், அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
6 போலீசார் பணியிடை நீக்கம்
போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விசாரணைக்காக போலீசார் அழைத்துச்சென்ற காவலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரிக்க உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்தனர். இதனால் இரவில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காயம் பட்ட இளைஞரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லாமல் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றது ஏன் என்றும் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை காவலர்கள் 6 பேரை பணியிடை நீக்கம் செய்து சிவகங்கை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications