திமுகவுக்கு போட்டியே இல்லை.. அமித்ஷா வலையில் சிக்கியது அதிமுக மட்டுமே – திருமாவளவன் பளீச்
காரைக்குடி: தமிழகத்தில் திமுகவுக்கு எதிராக அதிமுக, பாஜக, நாம் தமிழர், தவெக கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் திமுகவுக்கு மாற்றாக யாரும் உருவாகவில்லை. அமித்ஷா வலையில் அதிமுக மட்டுமே சிக்கியுள்ளது என்று கூறியுள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளன. இதனால் அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஆயத்தமாகி வருகிறது. தமிழகத்தில் ஆளும் திமுக தலைமையில் பலமான கூட்டணி உள்ள நிலையில், அதற்கு மாற்றாக வலுவான எதிர்க்கட்சியை உருவாக்கும் பணியில் அதிமுக, பாஜக ஈடுபட்டு வருகிறார். மத்திய அமைச்சர் அமித்ஷாவின் மதுரை வருகையும் அதன் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான அண்ணன் ஸ்டாலின் 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கூறியுள்ளார். அதற்கான செயல்திட்டங்களை அவர் வகுத்து வருகிறார். அதற்கு விசிக உரிய ஒத்துழைப்பு கொடுக்கும்.
தமிழ்நாட்டில் திமுகவுக்கு மாற்றாக எதிர் கூட்டணி உருவாகவில்லை. அமித்ஷா அடுத்தடுத்து தமிழ்நாடு வந்து கூட்டணி உருவாக்க முயற்சி செய்து வருகிறார். அதிமுக மட்டுமே பாஜக வலையில் சிக்கியுள்ளது. வேறு எந்தக் கட்சியும் அதற்கு உடன்படவில்லை. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வடிவமைப்பு பெறவில்லை என்பதே எதார்த்தமான உண்மை. திமுக கூட்டணி மட்டுமே வலுவாக உள்ளது.
எங்கள் மதசார்பற்ற கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அண்ணன் ஸ்டாலினின் செயல்திட்டங்களை செயல்படுத்த பணியாற்றுவோம். திமுக கூட்டணியில் வேறு கட்சிகள் சேரலாம் அல்லது வேண்டாம் என்று முடிவு எடுப்பது கூட்டணியின் முதலமைச்சர் தான் முடிவு செய்வார். ஒவ்வொரு தேர்தலிலும் நாங்கள் கூடுதல் சீட்களை எதிர்த்து பார்த்து தான் பேசுகிறோம்.
அந்தந்த அரசியல் கால சூழ்நிலை, கூட்டணி நலனை கருத்தில் கொண்டு எங்களின் பேச்சுவார்த்தை இருக்கும். அதையெல்லாம் பேச்சுவார்த்தையில் கடைசியாக முடிவு செய்வோம். தமிழ் மாநில காங்கிரஸ், 2016 சட்டமன்ற தேர்தலில் எங்கள் மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகித்தனர். இப்போது அவர்கள் பாஜக அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளனர்.
விடுதலை சிறுத்தை கட்சி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஒரு அங்கம். இதற்குள் மக்கள் நலக் கூட்டணியின் அடையாளம் இல்லை. விசிக மட்டுமல்ல மதிமுக, கம்யூனிஸ்ட்கள் எல்லோருமே மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் ஐக்கியமாகிவிட்டோம். தேமுதிக தமாக என யாராக இருந்தாலும் அவர்கள் எங்கு செல்ல வேண்டும் என்பதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இங்கு மக்கள் நலக் கூட்டணி அடையாளம் எல்லாம் இல்லை.
அதிமுக மாநிலங்களவை சீட் கொடுக்கவில்லை என்பதால் தேமுதிக அதிருப்தியில் உள்ளது. எனவே அவர்கள் திமுக கூட்டணிக்கு வருகிறார்கள் என்று வியூகமாக கருத முடியாது. அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் அதை முதல்வர் பார்த்துக் கொள்வார். கூட்டணி ஆட்சி என்பது விசிகவின் நிலைப்பாடு. ஆனால் அதற்கான சூழல் தமிழகத்தில் கணியவில்லை. அதனால் நாங்கள் அதை கைவிட்டுவிட்டோம் என கருத வேண்டாம். நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஒன்றை வலியுறுத்தவும் மாட்டோம்." என்றார்.












Click it and Unblock the Notifications