தமிழக சட்டசபைத் தேர்தல் 2026.. காரைக்குடி தொகுதியில் களமிறங்கும் சீமான்?
சிவகங்கை: 2026 சட்டசபைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சிவகங்கையில் இன்று நாதக சார்பாக மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நடக்கும் நிலையில், சீமான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2016ஆம் ஆண்டு கடலூர் தொகுதியிலும், 2021ஆம் ஆண்டு திருவொற்றியூர் தொகுதியிலும் சீமான் போட்டியிட்டார்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்களை அறிவித்து வருகிறார். இந்த நிலையில் சிவகங்கையில் இன்று நாம் தமிழர் கட்சி சார்பாக மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் சீமான் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது சட்டசபைத் தேர்தலில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் சீமான் போட்டியிடும் அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கு முன்பாக 2016ஆம் ஆண்டு கடலூர் தொகுதியிலும், 2021ஆம் ஆண்டு திருவொற்றியூர் தொகுதியிலும் சீமான் போட்டியிட்டார். அந்த இரு தேர்தலிலும் சீமானால் வெற்றி பெற முடியவில்லை.
இதனால் இம்முறை கட்டாயம் வெல்ல வேண்டும் என்று காரைக்குடி தொகுதியில் போட்டியிட முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. காரைக்குடி தொகுதியை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியே அதிக முறை வென்றுள்ளது. இம்முறையும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தொடரும் என்பதால், மீண்டும் இந்த காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்ய வாய்ப்புகள் அதிகம்.
சிட்டிங் எம்எல்ஏவான மாங்குடி மீண்டும் போட்டியிட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதேபோல் அதிமுக கூட்டணியிலும் பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த முறை காரைக்குடி தொகுதியில் நாதக சார்பாக போட்டியிட்ட துரை மாணிக்கம் 23,872 வாக்குகளை பெற்றார். முக்குலத்தோர், முத்தரையர் சமூக வாக்குகள் அதிகம் இருக்கின்றன.
திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் நேரடியாக களம் காண வாய்ப்புகள் இல்லாததால், சீமான் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் சிவகங்கை மாவட்டத்தில் நாதகவுக்கு நல்ல வலிமை உள்ளது. நாதக சார்பிலும் சில கருத்துக் கணிப்புகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பின்னரே சீமான் இந்த முடிவை எடுத்திருக்கலாம்.












Click it and Unblock the Notifications