சிவகங்கை விபத்து! இரு அரசு பேருந்துகளையும் இயக்கியவர்கள் ஒப்பந்த ஓட்டுநர்களா? அமைச்சர் விளக்கம்
சிவகங்கை: சிவகங்கை அருகே இரு வேறு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 11 பேர் பலியான நிலையில் இரு பேருந்துகளையும் இயக்கியவர்கள் ஒப்பந்த ஓட்டுநர்கள் என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அதற்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்துள்ளார்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அவர் கூறியிருப்பதாவது: நேற்று இரு பேருந்துகளையும் இயக்கியவர்கள் ஒப்பந்த ஓட்டுநர்கள் அல்ல, அரசின் ஓட்டுநர்கள் தான். கடந்த 3 ஆண்டுகளில் நடைபெற்ற பெரிய கோர விபத்து இது. இந்த விபத்தில் என்ன குற்றம் நடந்துள்ளது என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.

உரிய அனுபவமுள்ள, தகுதியான ஓட்டுநர்கள் தான் அரசு பேருந்துகளுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். எதிர்க்கட்சிகள் ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காக குற்றம் சாட்டுகிறார்கள்.
இது போன்ற விபத்துகள் நடக்காமல் இருப்பதற்காக ஓட்டுநர்கள், நடத்துபவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சிகளை இன்னும் அதிகரிப்போம்.
நீண்ட தூர பேருந்துகள் பல வருடமாக இயக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் அனுபவமுள்ள ஓட்டுநர்களை தான் பயன்படுத்தி வருகிறோம். இந்த விபத்து ஏதோ ஒரு அஜாக்கிரதை காரணமாக நடைபெற்றிருக்கிறது. ஓட்டுநர்களுக்கு பணிச்சுமை இருக்கிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்வோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கும்பங்குடி பாலம் அருகே நேற்று காரைக்குடி நோக்கி சென்ற அரசு பேருந்தும் மதுரை நோக்கிச் சென்ற மற்றொரு அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி கொண்டது. இந்த கொடூர விபத்தில் 9 பெண்கள் உள்பட 11 பேர் பலியாகிவிட்டனர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் இன்னும் சிலர் அபாய கட்டத்தில் இருக்கிறார்கள். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. விபத்துக் குறித்து தகவலறிந்த போலீஸார் உடனடியாக மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். சாலையில் பேருந்துகளின் கண்ணாடி துகள்கள் சிதறி கிடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து அவற்றை போலீஸார் அப்புறப்படுத்தினர். இநத் நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ 1 லட்சம், லேசான காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அது போல் சிவகங்கை விபத்து சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: சிவகங்கை மாவட்டத்தில் நடந்த பேருந்து விபத்து மிகவும் வேதனையை தருகிறது. சொந்தங்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ 50 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications