ரீல்ஸ் ஒரு சீரழிந்த கலாச்சாரம்.. ஆசிரியர்களுக்கே அச்சுறுத்தல்.. விளக்கமாக சொன்ன கார்த்திக் சிதம்பரம்
சிவகங்கை: தாங்கள் செய்யும் சமூகவிரோத செயல்களை அவர்களே இன்ஸ்டாகிராம் ரீல்ஸாக போட வேண்டும் என்ற சீரழிந்த கலாச்சாரத்தை காவல்துறை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். இதுபோன்ற கலாச்சாரத்தை வளரக் கூடாது என்று கூறிய கார்த்தி சிதம்பரம், இது வெறும் போதைப் பொருள் பயன்படுத்தியதால் நேர்ந்த சம்பவமாக பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுராஜ் என்ற இளைஞரை, அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த 4 சிறுவர்கள் ரயிலில் வைத்து பட்டாக் கத்தியுடன் குத்துவது, வெட்டுவது போல் செய்து ரீல்ஸ் வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் வெளியிட்டனர். ஒரு கட்டத்தில் வடமாநில இளைஞரான சுராஜை சிறுவர்கள் கத்தியால் தாக்கத் தொடங்கினர்.

தொடர்ந்து ரயில் திருத்தணி வந்தபின், சுராஜை வலுக்கட்டாயமாக இறக்கிய சிறுவர்கள், மறைவான இடத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்றனர். அங்கு வைத்து சுராஜை கண்மூடித்தனமாக அடித்து உதைத்திருக்கின்றனர். தாங்கள் வைத்திருந்த பட்டாக்கத்தியால் சுராஜின் கை, கால், தலை, முகம் என்று பல்வேறு இடங்களிலும் வெட்டத் தொடங்கியுள்ளனர்.
இதனை அந்த சிறுவர்கள் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸாக வெளியிட்டிருக்கின்றனர். இந்த வீடியோ தேசிய அளவில் கவனத்தை பெற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஜிடிபி வளர்ச்சியால் இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த தமிழ்நாட்டிற்கு, இந்த சம்பவம் தலைகுனிவை ஏற்படுத்தி இருப்பதாக பார்க்கப்படுகிறது.
இந்த சம்பவத்தின் போது சிறுவர்கள் கஞ்சா போதையில் இருந்ததாக தெரிகிறது. இதனால் சிறுவர்கள், இளைஞர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை காவல்துறை கட்டுப்படுத்த வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் பேசுகையில், இந்த சம்பவம் மிகப்பெரிய வருத்தம் அளிக்கிறது.
அவர்கள் செய்யும் சமூகவிரோத செயல்களை அவர்களே படமெடுத்து ரீல்ஸாக போட வேண்டும் என்ற ஆர்வம்.. இந்த கலாச்சாரத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். அதற்காகதான் தமிழக காவல்துறை தங்களின் பலத்தை காட்ட வேண்டும் என்று சொல்கிறேன். இப்படியான கலாச்சாரத்தை வளரவிடக் கூடாது. முதல்முறையாக இப்படியொரு சம்பவம் நடந்தது என்று பார்க்க முடியாது.
பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு இந்த மாதிரியான இளைஞர்களால் அச்சுறுத்தல் இருக்கிறது. இதனை வெறும் போதைப்பொருள் பிரச்சனையாக பார்க்கவில்லை. ஒரு சீரழிந்த கலாச்சாரமாகவே பார்க்கிறேன். ஒட்டுமொத்த தலைமுறையையும் நான் குறை சொல்ல மாட்டேன். ஒரு சில இடங்களில் தங்களை விளம்பரப்படுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காக சமூகவிரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
அதனை விளம்பரம் செய்து கொள்கிறார்கள். அதனை தடுக்க வேண்டும். அத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நடவடிக்கை எடுப்பது மட்டும் போதாது. அவர்களுக்கு போதுமான கவுன்சிலிங் மற்றும் மறுவாழ்வு மையம் மூலம் இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications