கணவனை கொன்று செப்டிக் டேங்கில் வீசிய மனைவி.. 9 வருடங்கள் கழித்து சிக்க வைத்த எலும்புக்கூடு
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள செப்டிக் டேங்கை சுத்தம் செய்த போது,மனித எலும்புக்கூடு இருந்தது. இந்நிலையில் கணவனை கொன்று செப்டிக் டேங்கில் வீசிவிட்டு 9 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் செப்டிக் டேங்கை பல நாட்கள் சுத்தம் செய்யாமல் இருந்த சீராளன் என்பவரின் வீட்டில் கடந்த செப்டம்பர் 9ம் தேதி சுத்தம் செய்யும் பணி நடந்தது.
தூய்மை பணியாளர்கள் அந்த வீட்டின் செப்டிக் டேங்கை சுத்தம் செய்தார்கள். அப்போது டேங்கில் இருந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த செப்டிக் டேங்கில் ஒரு ஆணின் சட்டை, கைலி, கண்ணாடி துண்டுகள், மனித எலும்பு கூடு உள்ளிட்டவை இருந்தன. இதுகுறித்து தூய்மை பணியாளர்கள் உடனடியாக சிவகங்கை மாவட்ட காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேவகோட்டை காவல்துறையினர் மனித எலும்புக்கூட்டை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே வீட்டில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்திய போது, அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியது.
சம்பவம் நடந்த வீட்டின் குடியிருப்பில் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு கொலை நடந்தது தெரியவந்தது. கடந்த 9 வருடங்களுக்கு முன்பு பாண்டியன்- சுகந்தி தம்பதியினர் குடும்பத்துடன் குறிப்பிட்ட வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
அப்போது பாண்டியன் குடிபோதையில் சுகந்தியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுகந்தி அவரை கீழே தள்ளிவிட்டுள்ளார். இதனால் தலையில் காயம் ஏற்பட்டு பாண்டியன் சம்பவ இடத்திலே இறந்து போனார். இதனால் என்ன செய்வது என்று யோசித்த சுகந்தி, பாண்டியனின் உடலை சுகந்தி செப்டிக் டேங்கில் போட்டு அடைத்துள்ளார். இந்த தகவலை கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து சுகந்தியை பிடித்து கைது செய்த போலீசார் கொலை எப்படி நடந்தது.. யாரேனும் சம்பந்தப்பட்டுள்ளனரா, இத்தனை நாட்களாக எப்படி மறைத்தார் என்பதை விசாரித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பாண்டியனின் இறப்பில் அவரது உறவினர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். பாண்டியனின் உடலை சுகந்தி மட்டும் தனியாக செப்டிக் டேங்கில் வீசியிருக்க முடியாது என்றும் சுகந்திக்கு அவரது உறவினர்கள் உதவியிருக்க கூடும் என்று சந்தேகிப்பதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்கள்.
இந்த புகாரையும் போலீசார் விசாரணைக்கு எடுத்துக் கொண்டு விசாரித்து வருகின்றனர். கணவனை கொன்று செப்டிக் டேங்கில் வீசிவிட்டு 9 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த மனைவி கைது செய்யப்பட்ட சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications