"இனி ஹோம் ஓர்க், டியூஷனுக்கு தடை!" குபீரென சிரித்த கார்த்தி சிதம்பரம்.. மக்கள் ரியாக்ஷன் என்ன பாருங்க
சிவகங்கை: காங்கிரஸ் சார்பில் சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் கார்த்தி சிதம்பரம் பிரச்சாரத்தின் போது ஹோம் ஒர்க் டியூசன்களுக்கு தடை விதிப்பேன் என்று கூறியது சிரிப்பலையை ஏற்படுத்தியது.
நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாட்டில் இருக்கும் 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடக்கிறது.

தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே இருப்பதால் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. மேலும், பல முனை போட்டி காரணமாகத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
தமிழ்நாடு களம்: பல முனை போட்டி என்றாலும் திமுக இந்த முறை அனைவருக்கும் முன்பாகவே கூட்டணியை அமைத்துவிட்டது. கடந்த சில ஆண்டுகளாக திமுக ஒரு கூட்டணியை அமைத்துப் பயணித்து வரும் நிலையில், இந்த முறையும் அதைக் கூட்டணியில் பயணிக்கிறது. இந்தக் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி இந்த முறையும் தமிழகத்தில் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி என 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இதில் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவரான ப சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு மீண்டும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. சிவகங்கை தொகுதியில் அவர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், காஞ்சிரங்கால் என்ற கிராமத்தில் அவர் பிரச்சாரம் செய்யும் போது நகைச்சுவையாகப் பேசி வாக்கு சேகரித்தார்.
தடை விதிப்பேன்: அந்தக் கூட்டத்தில் கார்த்தி சிதம்பரம் பேசுகையில், "பிள்ளைகளுக்குத் தெரியும்.. ஹோம் ஒர்க், டியூசன், எக்சாம் எந்தளவுக்குக் கஷ்டம் என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும். நான் வெற்றி பெற்றால் அவை அனைத்திற்கும் நான் தடை விதிப்பேன்" என்று நகைச்சுவையாகக் கூறினார். இதைக் கேட்டு அங்கிருந்த அனைவருமே சிரித்தார்கள்.
தொடர்ந்து கமெடிகளை அள்ளிவிட்ட அவர் ஒரு கட்டத்தில், "யாராவது போன் அடித்தார்கள் என்றால் எடுத்து ஹலோ சொல்லக் கூடாது கை சின்னம் என்று தான் சொல்ல வேண்டும். தேர்தல் முடியும் வரை ஹலோ சொல்லாமல் கை சின்னம் என்று தான் சொல்ல வேண்டும்" என்று கூற கூட்டத்தில் மீண்டும் சிரிப்பலை எழுந்தது.
சிவகங்கை லோக்சபா தொகுதி: சிவகங்கையில் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் சிட்டிங் எம்பி கார்த்தி சிதம்பரத்திற்கு மீண்டும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. அங்கே அதிமுக சார்பில் சேவியர் தாஸ் என்பவர் போட்டியிடும் நிலையில், பாஜக சார்பில் தேவநாதன் யாதவ், நாம் தமிழர் சார்பில் வி.எழிலரசி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
கடந்த 2019 லோக்சபா தேர்தலைப் பொறுத்தவரை அங்கே போட்டியிட்ட கார்த்தி சிதம்பரம் 5.66 லட்சம் வாக்குகளைப் பெற்று சுமார் 3.32 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு எதிராகப் போட்டியிட்ட பாஜகவின் ஹெச் ராஜா 2.33 லட்சம் வாக்குகளையும் அமமுகவின் வி பாண்டி 1.22 லட்ச வாக்குகளையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
முடிவுகள் எப்போது: இந்த முறை இந்தியாவில் மொத்தம் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடக்கும் நிலையில், கடைசிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி நடக்கிறது. அதைத் தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.












Click it and Unblock the Notifications