ஆமா, 356ஐ பயன்படுத்தி ஆட்சிகளை கலைத்தோம்.. ஏன் தெரியுமா? பிரதமர் மோடிக்கு, ப சிதம்பரம் பதிலடி
காங்கிரஸ் கட்சி சட்டப்பிரிவு 356யை பயன்படுத்தி மாநில அரசுகளை கலைத்ததாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாடாளுமன்றத்தில் பேசி பரபரப்பை கிளப்பிய நிலையில் ப சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார்.
சிவகங்கை: ஜனாதிபதி திரெளபதி முர்முவின் உரைக்கு நன்றி தெரிவித்து நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நேற்று பிரதமர் மோடி பேசினார். அப்போது காங்கிரஸ் கட்சி சட்டப்பிரிவு 356யை பயன்படுத்தி மாநில அரசுகளை கலைத்ததாக பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 31ம் தேதி தொடங்கியது. ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையாற்றி கூட்டத்தொடரை தொடக்கி வைத்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தின் மக்களவையில் (லோக்சபா) ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பேசினார்.
அதன்பிறகு நேற்று மாநிலங்களவையில் (ராஜ்யசபா) பிரதமர் மோடி, ஜனாதிபதி திரெளபதி முர்முவின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதிலளித்து பேசினார். இந்த வேளையில் பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார்.

ஆட்சிகளை கலைத்த காங்கிரஸ்
அரசியலமைப்பு சட்டப்பிரிவு 356ஐ பயன்படுத்தி 90 முறை மாநில ஆட்சியை கலைத்தது யார் தெரியுமா?. அதிலும் ஒருவர் மட்டும் 356 சட்டப்பிரிவை பயன்படுத்தி 50 முறைகளுக்கு மேல் மாநில ஆட்சியை கலைத்திருக்கிறார். அது இந்திரா காந்தி தான். தமிழ்நாட்டின் முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் ஆட்சியை கவிழ்த்தது இந்திரா காந்தி. அந்த இந்திரா காந்தியின் கட்சியுடன் தான் இப்போது திமுக கூட்டணி வைத்துள்ளது. எம்ஜிஆர், சரத்பவார், ஆட்சியையும் காங்கிரஸ் கட்சி கலைத்திருக்கிறது. ஆந்திராவில் என்டிஆர் ஆட்சியை கலைக்க காங்கிரஸ் முயற்சித்தது'' என பேசி காங்கிரஸ் மற்றும் திமுகவை பிரதமர் மோடி கடுமையாக சாடினார்.

ப சிதம்பரம் பத்திரிகையாளர் சந்திப்பு
இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போதைய பிரச்சனைகளுக்கு பதில் அளிக்க முடியாத பிரதமர் நரேந்திர மோடி, முந்தைய காங்கிரஸ் கட்சியின் செயல்பாட்டை விமர்சனம் செய்கிறார் என சாடினர். இந்நிலையில் தான் சிவகங்கை மாவட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களை எம்பியுமான ப சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நாங்கள் மறுக்கவில்லையே
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேசியது உரையல்ல. அவர் அனைத்து கட்சிகளையும் திட்டியுள்ளார். சட்டப்பிரிவு 356ஐ பயன்படுத்தவில்லை என நாங்கள் எங்கேயும் கூறவில்லை. அன்றைய சூழலில் 356ஐ பயன்படுத்த வேண்டிய சூழல் இருந்ததால் பயன்படுத்தினார்கள். அதில் தவறில்லை. தவறு இருந்தால் மக்கள் அன்றைய தினமே கண்டித்து இருப்பார்கள்.

அரசியல் சாசனத்தை பின்பற்றாத பாஜக
பொம்மை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு தான் ஒரு அரசை நீக்குவதற்கு வரைமுறைகள் வகுக்கப்பட்டன. அதற்கு பிறகு வந்த அரசுகள் எந்த அளவுக்கு அரசியல் சாசனத்தை பின்பற்றி இருக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். பாஜகவினர் அரசியல் சாசனத்தை பின்பற்றுவது கிடையாது. எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகிறார்கள். அரசை நீக்கி தேர்தல் நடத்தினால் கூட பரவாயில்லை. எம்எல்ஏக்களையே விலைக்கு வாங்கி விடுகிறார்கள். சமீபத்தில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கியத கோவாவில். 12 எம்எல்ஏக்களில் 8 பேரை விலைக்கு வாங்கினர். ஆபரேஷன் தாமரை என்பது எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவதாகும். 356யை பற்றி பேசியவர் ஆபரேஷன் தாமரை பற்றியும் பேசி இருக்க வேண்டும் அல்லவா?'' என்றார்.












Click it and Unblock the Notifications