5 ஆண்டுகள் ஏமாற்ற முடியுமா? அலகாபாத் நீதிமன்றம் கேள்வி.. ஆர்சிபி வீரர் யாஷ் தயாளை கைது செய்ய தடை!
அலகாபாத்: திருமண மோசடி புகார் தொடர்பான வழக்கில் கிரிக்கெட் வீரர் யாஷ் தயாளை கைது செய்ய அலகாபாத் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு ஆர்சிபி அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் யாஷ் தயாளுக்கு நிம்மதியை கொடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் 17 ஆண்டுகளுக்கு பின் ஆர்சிபி அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது. ஆர்சிபி அணி கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக இளம் வேகப்பந்துவீச்சாளர் யாஷ் தயாள் அமைந்தார். ஹேசல்வுட் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோரு சிறந்த கம்பெனியை யாஷ் தயாள் கொடுத்தார். இதனால் யாஷ் தயாள் விரைவில் இந்திய அணியில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

யாஷ் தயாள் சர்ச்சை
இந்த நிலையில் யாஷ் தயாள் புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கி இருக்கிறார். உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் யாஷ் தயாள் மீது திருமண மோசடி குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். முதல்வரின் தனிப் பிரிவுக்கு அந்தப் பெண் அளித்த புகாரில், கடந்த 5 ஆண்டுகளாக யாஷ் தயாளுடன் உறவில் இருந்தேன்.
பெண் அளித்த புகார்
இந்த 5 ஆண்டுகளில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சுரண்டப்பட்டதாக கூறி இருந்தார். அதுமட்டுமல்லாமல் யாஷ் தயாள் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி தன்னை ஏமாற்றியதாகவும் புகாரில் கூறி இருந்தார். அந்த புகாருக்கு பின் யாஷ் தயாள் தொடர்புடைய ஸ்க்ரீன்ஷாட், வீடியோ அழைப்புகள் உள்ளிட்டவை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.
வழக்குப்பதிவு
இந்த புகாருக்கு பின் யாஷ் தயாள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வரின் தனிப்பிரிவு உத்தரவிட்டது. பின்னர் யாஷ் தயாள் மீது இந்திராபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த பெண்ணின் புகாரை யாஷ் தயாள் மறுத்ததோடு, தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரை ரத்து செய்யக் கோரி யாஷ் தயாள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நீதிபதிகள் கருத்து
இந்த வழக்கு நீதிபதி சித்தார்த்த வர்மா மற்றும் நீதிபதி அனில் குமார் ஆகியோரின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், உங்களை ஒருநாள், 2 நாட்கள், 3 நாட்கள் ஏமாற்றி இருக்கலாம்.. ஆனால் 5 ஆண்டுகள் ஒருவரை ஏமாற்ற முடியாது. ஒரு உறவில் நுழைகிறீர்கள் என்றால், அவரை 5 ஆண்டுகள் ஏமாற்ற முடியாது என்று கருத்து தெரிவித்தனர்.
யாஷ் தயாளை கைது செய்ய தடை
தொடர்ந்து, யாஷ் தயாள் கைது செய்யவும் நீதிபதிகள் தடை விதித்தனர். இதனிடையே யாஷ் தயாள் மற்றும் அந்தப் பெண் காதலித்து வந்ததாகவும், தற்போது யாஷ் தயாள் காதல் உறவில் இருந்து விலகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. குஜராத் அணிக்காக யாஷ் தயாள் விளையாடிய போதே, அந்தப் பெண்ணுடன் மைதானத்தில் எடுத்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகியது.












Click it and Unblock the Notifications