Asia Cup: பாகிஸ்தானுடன் இந்திய அணி மோதுமா? கிரீன் சிக்னல் தந்த மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம்!
சென்னை: ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (செப்டம்பர்) 9 ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இதில் பாகிஸ்தான் அணியுடன் இந்தியா கிரிக்கெட் அணி விளையாடுமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் முக்கிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆசிய நாடுகள் இடையே 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகிறது. கடந்த, 2023ம் ஆண்டில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில் தான் அடுத்த மாதம் (செப்டம்பர்) 9 ம் தேதி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கி நடைபெற உள்ளது.

இந்த தொடர் செப்டம்பர் 9 ம் தேதி முதல் செப்டம்பர் 28 ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்க உள்ளன. இது டி20 தொடராகும்.
அதன்படி 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட அணிகள் இடம்பெற்றுள்ளன. 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகள் இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் லீக்கில் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் ஒரு போட்டியில் விளையாடும். லீக் சுற்றில் ஒவ்வொரு பிரிவும் ‛டாப்' 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும். அங்கு முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி போட்டியில் மோதும்.
இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை செப்டம்பர் 10ம் தேதி எதிர்கொள்ள உள்ளது. அதன்பிறகு செப்டம்பர் 14ம் தேதி பரம எதிரியான பாகிஸ்தானுடனும், செப்டம்பர் 19ம் தேதி ஓமனையும் எதிர்கொள்ள உள்ளது. இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் (கேப்டன்) , கில் (துணை கேப்டன் ), அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா , ஹர்திக் பாண்டியா , ஷிவம் துபே, அக்சர் படேல் , ஜிதேஷ் சர்மா , பும்ரா, அர்ஷ்தீப், வருண் சக்கரவர்த்தி, குல்தீப், சஞ்சு சாம்சன் , ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங் உள்ளிட்டவர்கள் இடம்பிடித்துள்ளனர்.
தற்போது நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கடும் மோதல் போக்கு உள்ளது. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது நம் நாடு ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலமாக அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குலை தொடர்ந்து போர் நடந்து முடிவடைந்தது. நம்மிடம் பாகிஸ்தான் கெஞ்சியதால் தாக்குதல் கைவிடப்பட்டது.
இதனால் பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டியை நம்நாட்டின் வீரர்கள் புறக்கணித்து வருகின்றனர். சமீபத்தில் நடந்த லெஜண்ட்ஸ் கிரிக்கெட் லீக் தொடரில் நம் நாட்டின் வீரர்கள் பாகிஸ்தானுடன் விளையாட மறுத்தனர்.
இதனால் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி, பாகிஸ்தானுடன் விளையாடுமா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் தான் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியா - பாகிஸ்தான் இடையே இருநாடுகள் இடையே நேரடியாக எந்த தொடரும் நடக்காது.
அதேவேளையில் வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை எதிர்த்து விளையாடும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி செப்டம்பர் 14ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications