பரிதவித்த கங்காரு பாய்ஸ்.. மீண்டும் காப்பானான ஸ்டீவ் ஸ்மித்.. சான்ஸை மிஸ் செய்த தென்னாப்பிரிக்கா!
லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி 67 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. அப்போது ஸ்டீவ் ஸ்மித் தன்னந்தனியாக போராடிய ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் அடித்து ஆஸ்திரேலியா அணியை மீட்டெடுத்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பாக ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பின் பேட்டை கையில் எடுக்கவே இல்லை என்று தெரிவித்திருந்தார். ஆனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா அணி தடுமாறிய போது, ஸ்டீவ் ஸ்மித் அசத்தலாக விளையாடி இருக்கிறார்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு கவாஜா - லபுஷேன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் கவாஜா டக் அவுட்டாகி வெளியேற, பின்னர் வந்த கேமரூன் க்ரீன் 4 ரன்களில் வெளியேறினார். இதனால் ஆஸ்திரேலியா அணி 16 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதன்பின் லபுஷேன் - ஸ்டீவ் ஸ்மித் கூட்டணி இணைந்து சிறிது நேரம் போராட, யான்சன் பவுலிங்கில் லபுஷேன் 17 ரன்களிலும், ட்ராவிஸ் ஹெட் 11 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் ஆஸ்திரேலியா அணி 67 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது ஸ்டீவ் ஸ்மித் - வெப்ஸ்டர் கூட்டணி இணைந்தது.
வெப்ஸ்டரை ஒரு பக்கம் வைத்துவிட்டு இன்னொரு பக்கம் ஆட்டத்தின் மொத்த கட்டுப்பாட்டையும் ஸ்டீவ் ஸ்மித் எடுத்து கொண்டார். அதிரடியாக பவுண்டரிகளை விளாசி தள்ளிய ஸ்டீவ் ஸ்மித், 76 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். இவரின் அரைசதம் காரணமாக ஆஸ்திரேலியா அணி 100 ரன்களையும் கடந்தது. ஐசிசி தொடரின் இறுதிப்போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் அடிக்கும் 3வது அரைசதம் இதுவாகும்.
அதேபோல் லார்ட்ஸ் மைதானத்தில் அதிக ரன்களை விளாசிய வெளிநாட்டு வீரர் என்ற சாதனையையும் ஸ்டீவ் ஸ்மித் படைத்தார். சிறப்பாக ஆடிய ஸ்டீவ் ஸ்மித் 66 ரன்கள் எடுத்திருந்த போது மார்க்ரம் சுழலில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஆனாலும் ஆஸ்திரேலியா அணிக்கு தேவையான ரன்களை ஸ்டீவ் ஸ்மித் எடுத்து கொடுத்திருப்பதாக பார்க்கப்படுகிறது.
இந்த இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 250 ரன்களை எட்டினாலே, தென்னாப்பிரிக்கா அணிக்கு மிகப்பெரிய அழுத்தம் கொடுக்க முடியும். இதனால் ஸ்டீவ் ஸ்மித்தின் இந்த இன்னிங்ஸை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். தேவையான நேரத்தில் ஆஸ்திரேலியா அணியின் காப்பானாக ஆடி இருப்பதாக ஸ்டீவ் ஸ்மித்தை புகழ்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications