யாரும் எதிர்பார்க்கல.. ஆஸி. பிரதமர் சொன்ன வார்த்தைக்கு கோலி தந்த பதிலடி.. எல்லாரும் ஸ்டன் ஆகிட்டாங்க
கான்பரா: இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பயிற்சி ஆட்டம் நடைபெறுகிறது. இதற்கிடையே அந்நாட்டுப் பிரதமர் அல்பனீஸை இந்திய அணி வீரர்கள் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தனர். அப்போது அந்நாட்டின் பிரதமருக்கும் இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் கோலிக்கும் இடையே நடந்த உரையாடல் இப்போது டிரெண்டாகி வருகிறது.
இந்திய அணி இப்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. பெர்த்தில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.

2வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலிய தலைநகர் கான்பெராவில் 2 நாள் பயிற்சி ஆட்டம் நடைபெறுகிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தயாராகி வருகிறார்கள். நாளை மற்றும் நாளை மறுநாள் என்று இரண்டு நாட்கள் இந்த பயிற்சி ஆட்டம் நடைபெறுகிறது.
ஆஸ்திரேலியா பிரதமர்: போட்டிக்கு முன்னதாக இந்திய அணி ஆஸ்திரேலியாவின் பிரதமர் ஆண்டனி அல்பனீஸை சந்தித்தது. கேப்டன் ரோஹித் சர்மா, இந்திய அணி வீரர்களை அறிமுகப்படுத்தினார். இந்த சந்திப்பு கொஞ்ச நேரம் மட்டுமே நடந்தது என்ற போதிலும், அப்போது ஆஸ்திரேலிய பிரதமர் மற்றும் கோலி இடையே நடந்த உரையாடல் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
பெர்த் போட்டியில் விராட் கோலியை ஆட்டத்தைப் பிரதமர் அல்பனீஸ் பாராட்டிய நிலையில், அதற்குக் கோலி சொன்ன பதில் அங்குச் சிரிப்பலையை ஏற்படுத்தியது. இருவரும் முதலில் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர். அப்போது கோலியிடம் ஆஸ்திரேலியா பிரதமர் அல்பனீஸ், "சும்மா சொல்லக் கூடாது.. பெர்த்தில் உங்கள் ஆட்டம் நன்றாக இருந்தது.. ஏற்கனவே பல சிக்கல்.. இது நீங்கள் வேறயா" என்பது போல ஆஸ்திரேலிய பிரதமர் கூறினார்.
அல்பனீஸ்: அதாவது பெர்த் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் ஏற்கனவே ராகுல்- ஜெய்ஸ்வால் வலுவான தொடக்கம் அமைத்துக் கொடுத்து இருந்தனர். ஜெய்ஸ்வால் 161 ரன்களை எடுத்த நிலையில், கோலியும் தனது பங்கிற்குச் சதம் அடித்தார். இதனால் தான் இந்தியா அணியின் ஸ்கோர் 487ஆக உயர்ந்தது. இதைக் குறிப்பிட்டே ஏற்கனவே உங்கள் அணி அடித்து வெளுக்கும் போது நீங்களும் சதம் அடித்துள்ளீர்களே என்பது போல அல்பனீஸ் பேசியிருந்தார்.
கோலி நறுக் பதில்: அதற்குக் கோலி கொடுத்த பதில்தான் அதை விட ஹைலைட்.. சற்றும் யோசித்தாக கோலி, "எப்போதும் (இதுபோல) கொஞ்சம் கூடுதலாக மசாலா சேர்க்க வேண்டும்" என்று பதிலளித்தார். இதைக் கேட்டதும் பிரதமர் அல்பனீஸ், கேப்டன் ரோஹித், அருகே இருந்த ஜடேஜா என எல்லாரும் சிரித்துவிட்டனர். இந்த வீடியோ தான் இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
இந்திய அணியின் 2வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் வரும் டிசம்பர் 6ம் தேதி பகலிரவு போட்டியாக நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக ஆஸ்திரேலியா பிரதமர் 11 என்ற அணிக்கு எதிராக இந்திய அணி இந்த 2 நாள் பயிற்சி போட்டியில் விளையாட உள்ளது. இது உள்ளூர் சூழலுக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்ள இந்தியா அணி வீரர்களுக்கும் நிச்சயம் உதவியாக இருக்கும்.
முன்னதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை தேர்வாளர் ஜார்ஜ் பெய்லி இந்த பயிற்சி போட்டி குறித்துக் கூறுகையில், "பிரதமர் 11ல் அனுபவம் மற்றும் இளம் வீரர்கள் என்று எல்லாம் சேர்ந்த ஒரு கலவையான அணியை எடுத்துள்ளோம். இந்த அணியை உருவாக்குவதில் ஆஸ்திரேலியா பிரதமரின் கருத்துகளும் இருந்தது. அதை நாங்கள் வரவேற்கிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications