ரியல் கேம்சேஞ்சர் குல்தீப் யாதவ்.. கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு உதவிய அந்த சம்பவம்.. எப்படி தெரியுமா?
துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி 3வது முறையாக கைப்பற்றியதற்கு நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் முக்கிய காரணமாக மாறியுள்ளார். அதாவது ரச்சின் ரவீந்திரா மற்றும் கேன் வில்லியம்சன் ஆகிய இருவரின் விக்கெட் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது திட்டங்களை செயல்படுத்த காரணமாக அமைந்துள்ளது. அது எப்படி என்பதை பார்க்கலாம்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியுள்ளது. இதன் மூலமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரை அதிக முறை வென்ற அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. இதனால் இந்திய அணி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இந்திய அணியின் இந்த வெற்றிக்கு நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் முக்கிய காரணமாக அமைந்தார். 10 ஓவர்களை வீசிய அவர் 40 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். சாதாரணமாக 2 விக்கெட்டுகள் என்று பார்க்காமல், சூழல் மற்றும் வீரர்களின் பெயருடன் பார்க்கும் போது குல்தீப் யாதவ் என்ன செய்துள்ளார் என்பது புரியும்.
ஏனென்றால் பவர் பிளே ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 69 ரன்களை குவித்திருந்தது. குறிப்பாக இடதுகை பேட்ஸ்மேனான ரச்சின் ரவீந்திராவை கட்டுப்படுத்த முடியாமல் இந்திய அணி திணறியது. அட்டாக்கிங் இடதுகை பேட்ஸ்மேனான ரச்சின் ரவீந்திரா களத்தில் இருந்ததால், வழக்கமாக 8வது ஓவரை வீச வரும் அக்சர் படேலையும் ரோஹித் சர்மாவை அட்டாக்கில் கொண்டு வர முடியவில்லை.
இதனால் வேறு வழியின்றி வருண் சக்கரவர்த்தியை 7வது ஓவரிலேயே ரோஹித் சர்மா அட்டாக்கில் கொண்டு வர வேண்டிய சூழலை ரச்சின் ரவீந்திரா ஏற்படுத்திவிட்டார். இதனால் தொடக்கத்திலேயே வருண் சக்கரவர்த்தி - குல்தீப் யாதவ் இருவரையும் ஒரே நேரத்தில் அட்டாக்கில் கொண்டு வேண்டிய சூழலுக்கு ரோஹித் சர்மாவை ரச்சின் ரவீந்திரா தள்ளி இருந்தார்.
அந்த நேரத்தில்தான் குல்தீப் யாதவ் தனது முதல் பந்திலேயே ரச்சின் ரவீந்திராவின் விக்கெட்டை 37 ரன்களில் வீழ்த்தி அசத்தினார். நன்றாக பார்த்தால், அதன்பின் உடனடியாக அக்சர் படேல் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டிருப்பார். இதன்பின் குல்தீப் யாதவ் தனது 2வது ஓவரிலேயே கேன் வில்லியம்சன் விக்கெட்டை தூக்கியதுதான் மாஸ்டர் ஸ்ட்ரோக்.
ஏனென்றால் களத்தில் கேன் வில்லியம்சன் நின்றிருந்தால் டேரல் மிட்சல் அவ்வளவு டாட் பால்களை ஆடியிருக்க மாட்டார். 40 பந்துகளுக்கு மேல் கேன் வில்லியம்சனை களத்தில் நிற்க வைத்தால், ஆட்டம் வேறு மாதிரி சென்றிருக்கும். நேற்றைய ஆட்டத்தில் மட்டும் நியூசிலாந்து அணி 154 டாட் பால்களை ஆடியுள்ளது. அதற்கு குல்தீப் யாதவின் 2 விக்கெட்டுகளே முக்கிய காரணம்.
அதன்பின் விரைவாக பவுலிங் செய்யும் ஜடேஜாவையும், அக்சர் படேலையும் வைத்து ரோஹித் சர்மா ஓவர்களை கடத்த தொடங்கினார். ஒரு இடத்தில் ஜடேஜா வெறும் 45 நொடிகளில் ஒரு ஓவரை வீசி வெளியேறியது நியூசிலாந்து ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளித்திருக்கும். இதனால் இந்திய அணியின் வெற்றியில் குல்தீப் யாதவ் ரியல் கேம்சேஞ்சராக செயல்பட்டிருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications