நான் சொல்றேன்.. சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லாது.. அடித்து சொல்லும் அஸ்வினின் நண்பர்!
சென்னை: சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லாது என்றும், கடைசி 4 இடங்களில் ஒன்றில் மட்டுமே நிறைவு செய்யும் என்றும் பிரபல அனலிஸ்ட்டும், அஸ்வினின் நண்பருமான பிரசன்னா கணித்துள்ளார். இவரின் வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வரும் சூழலில், சிஎஸ்கே ரசிகர்கள் அவருக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் அபுதாபியில் நடந்து முடிவடைந்திருக்கிறது. சிஎஸ்கே அணியை பொறுத்தவரை மிகப்பெரிய தொகையுடன் சென்று, அதிகளவில் இளம் வீரர்களை வாங்கி இருக்கின்றனர். குறிப்பாக கார்த்திக் சர்மா, பிரசாந்த் வீர் ஆகியோரை தலா ரூ.14.2 கோடிக்கு வாங்கினர். அதேபோல் சர்ஃபராஸ் கான், ஃபுவுல்க்ஸ், மேட் ஹென்ரி உள்ளிட்டோரை வாங்கி இருக்கின்றனர்.

இதனால் தோனி முதல் 2 அல்லது 3 போட்டிகளுடன் ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முழுக்க முழுக்க சிஎஸ்கே அணி இளம் வீரர்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல் சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவன் சிறப்பாக தயாராகி இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.
ஆனால் அஸ்வினின் நண்பரும், பிரபல அனலிஸ்ட்டுமான பிரசன்னா என்ற PDogg அவரின் யூடியூப் பக்கத்தில், சிஎஸ்கே அணியை பார்த்தால் கொஞ்சம் பாவமாக இருக்கிறது. தோனியின் வியூகமே இளம் வீரர்கள் மற்றும் அனுபவம் வீரர்கள் நல்ல கலவையுடன் ஒரு அணியை கட்டமைப்பதுதான். அனுபவத்தை எந்த கடையிலும் வாங்கிவிட முடியாது. ஆனால் சிஎஸ்கே அணியில் அனுபவ வீரர்கள் என்று யாருமே இல்லை.
டிவால்ட் பிரெவிஸ், சிவம் துபே ஆகியோர் மோசமான ஃபார்மில் இருக்கிறார்கள். டெத் பவுலிங் வீசுவதற்கு பவுலர்களே இல்லை. என்னை பொறுத்தவரை சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கே செல்லாது. கடைசி 4 இடங்களில் தான் நிறைவு செய்யும் பாருங்கள் என்று ஆவேசமாக கூறி இருக்கிறார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.
ஆனால் சிஎஸ்கே அணியின் ஆயுஷ் மாத்ரே, சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட், சிவம் துபே, டிவால்ட் பிரெவிஸ், கார்த்திக் சர்மா என்று பேட்டிங் ஆர்டர் அமைக்கப்பட்டுள்ளது என்றும், பிரசாந்த் வீர், அன்சுல் கம்போஜ், நேதன் எல்லீஸ், நூர் அஹ்மத், கலீர் அஹ்மத் ஆகியோர் பவுலிங் வரிசையில் இருப்பதாகவும் பதிலடி கொடுத்து வருகின்றனர். அதேபோல் உர்வில் படேல் அல்லது ராகுல் சஹர் அல்லது ஸ்ரேயாஸ் கோபாலை இம்பேக்ட் பிளேயராக விளையாட வைக்க முடியும் என்றும் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications