நாளை சேப்பாக்கத்தில் "தல" தோனி சர்ப்ரைஸ் என்ட்ரி? வாழ்வா சாவா போட்டியில் சிஎஸ்கே.. முக்கிய தகவல்
சென்னை: ஐபிஎல் தொடர் இப்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்போது புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் சென்னை உள்ள நிலையில், அடுத்து வரும் இரு போட்டிகளிலும் சிஎஸ்கே வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இதற்கிடையே நாளை நடைபெறும் போட்டியில் தோனி களமிறங்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 2026 லீக் சுற்றுகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களின் இதயத் துடிப்பு எகிறத் தொடங்கியுள்ளது. இன்னும் இரண்டே போட்டிகள் மட்டுமே மீதமிருக்கும் நிலையில், ஐந்து முறை சாம்பியனான சிஎஸ்கேவின் ப்ளே-ஆஃப் கனவு ஒரு மெல்லிய நூலில் தொங்கிக் கொண்டிருக்கிறது.

"தல" தோனி
இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பே ஏற்பட்ட காயம் காரணமாக, 44 வயதான சிஎஸ்கேவின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. முதலில் சில வாரங்கள் மட்டுமே அவர் விளையாட மாட்டார் எனச் சொல்லப்பட்ட நிலையில், அதன் பிறகும் அவர் களமிறங்கவே இல்லை. அவர் குணமடைந்து வருவதாக சென்னை அணி நிர்வாகம் தொடர்ந்து கூறி வந்தாலும், அவர் எப்போது களமிறங்குவார் என்பது இன்னும் மர்மமாகவே நீடிக்கிறது.
இந்நிலையில், புகழ்பெற்ற கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்லே ஒரு சுவாரஸ்யமான கணிப்பை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர், "சென்னையில் இன்னும் ஒரே ஒரு ஹோம் மேட்ச் தான் மீதமுள்ளது. மே 18ம் தேதி நடக்கும் அந்தப் போட்டியில் ஒட்டுமொத்த சேப்பாக்கமும் மஞ்சள் கடலாக மாறும் என்பதில் சந்தேகமில்லை. அங்கே தோனி ஒரு ஹிட்ச்காக் பாணி த்ரில்லர் படத்தைப் போல திடீரென சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்தாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன்!" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை அணி
தற்போது 12 போட்டிகளில் விளையாடி 12 புள்ளிகளுடன் இருக்கும் சென்னை அணி, ப்ளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் கட்டாயம் வென்றாக வேண்டும். நாளை மே 18ம் தேதி திங்கள் சென்னை அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை சேப்பாக்கத்தில் எதிர்கொள்கிறது. அதைத் தொடர்ந்து மே 21ம் தேதி வியாழக்கிழமை குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் அகமதாபாத்தில் மோதுகிறது.
சனிக்கிழமை நடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தனது ப்ளே-ஆஃப் நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொண்டது. ஃபின் ஆலனின் அதிரடி 93 (35 பந்துகள்) மற்றும் அங்கிரிஷ் ரகுவன்ஷியின் 82* (44 பந்துகள்) ரன்களின் உதவியோடு கேகேஆர் 247 ரன்கள் குவித்தது. கேமரூன் கிரீனும் 52 ரன்கள் விளாசினார். பதிலுக்கு ஆடிய குஜராத் அணியில் கேப்டன் சுப்மன் கில் (85), ஜோஸ் பட்லர் (57), சாய் சுதர்சன் (53*) போராடியும் 218 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
சிக்கல்
கேகேஆர் டீமின் இந்த இமாலய வெற்றியால், சிஎஸ்கே-வின் ப்ளே-ஆஃப் தகுதி பெறும் வாய்ப்பு 28.4 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாகக் குறைந்துள்ளது சென்னை ரசிகர்களுக்குச் சற்றே பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், அடுத்த இரு போட்டிகளிலும் வென்று சிஎஸ்கே அரையிறுதிக்குச் செல்லும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார்கள் சிஎஸ்கே ரசிகர்கள்!
தற்போதைய சூழலில் எந்தவொரு அணியும் ப்ளே ஆப் இடத்தை உறுதி செய்யவில்லை. ஆனால், பெங்களூர் அணி 16 புள்ளிகளுடன் கிட்டத்தட்ட தனது இடத்தை உறுதி செய்துவிட்டது. அவர்கள் அடுத்து வரும் இரு போட்டிகளில் ஒன்றில் வென்றால் போதும். அடுத்த 3 இடங்களுக்குத் தான் குஜராத், ஹைதராபாத், பஞ்சாப், ராஜஸ்தான், சென்னை, கொல்கத்தா என 6 அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.
கட்டாய வெற்றி
சிஎஸ்கேவுக்கு இனி வரும் இரண்டு போட்டிகளும் வாழ்வா சாவா போராட்டம் தான். ஐதராபாத் மற்றும் குஜராத் ஆகிய பலமான அணிகளை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் ருதுராஜ் படை உள்ளது. இந்த இக்கட்டான சூழலில், மே 18 அன்று சேப்பாக்கத்தில் 'தல' தோனி பேட்டை பிடித்துக்கொண்டு மைதானத்திற்குள் நுழைந்தால், அது சென்னை அணிக்கு வீரர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஐபிஎல் ரசிகர்களுக்கும் ஒரு மிகப் பெரிய உற்சாகத்தைக் கொடுக்கும். 'தல' வருவாரா, சிஎஸ்கே ஜெயிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!












Click it and Unblock the Notifications